இந்தியா

மும்பை ஓட்டலில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள்: கர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பு

செய்திப்பிரிவு

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணியில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 79 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சியில் ஒரு எம்எல்ஏவும் உள்ளனர்.

பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளையும், காங்கிரஸ் , ஜேடிஎஸ் தலா ஒரு தொகுதியையும் வென்றது. சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததால், இரு கட்சியின் நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் குமாரசாமியை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் பலர் ஏற்கவில்லை, வெளிப்படையாகவே கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர். இதனால், பலஇடங்களில் முதல்வர் குமாரசாமி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதனால் ஜேடியு, காங்கிரஸ் இடையே கடும் உரசல் உள்ளுக்குள் இருந்து வந்தது.

கடந்த மே மாதத்தில் இரு்ந்து முறை காங்கிரஸ் தலைமையிடத்தில் இருந்து வந்து நிர்வாகிகள் சமாதானப்பேச்சு நடத்தினார்கள். இதற்கிடையே உட்கட்சி பூசல் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்து மாநிலப் பொறுப்பாளர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் குமாரசாமியின் அரசு கவிழும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடகாவைச் சேர்ந்த  காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை மும்பையில் தங்க வைத்து கர்நாடகா அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

SCROLL FOR NEXT