வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடமாட்டார். அவருக்குப் பதிலாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கை தொகுதியில் 1984 தொடங்கி இதுவரை எட்டு முறை போட்டியிட்ட ப.சிதம்பரம் ஏழுமுறை வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 22 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அதிகாரம் கொண்ட இலாக்காக்களில் இருந்திருக்கிறார். தொகுதிக்கு பெரிய அளவில் சாதித்துக் கொடுக்கவில்லை என்றாலும், பின்தங்கிய சிவகங்கைக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றால் அது சிதம்பரத்தால்தான்.
ஆனாலும், சிதம்பரத்துக்கு கடந்த தேர்தலில் ஏகப்பட்ட நெருக்கடிகள். அதனால், ஒரு காலத்தில் ரெண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருக்கு கடந்தமுறை வெறும் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி வெற்றியைக் கொடுத்தது சிவகங்கை. “இனிமேல் என்னால் தேர்தலில் ஓட்டுக் கேட்டு போக முடியாது. இதுதான் கடைசித் தேர்தல்” என அப்போதே காங்கிரஸாரிடம் சிதம்பரம் சொன்னதாகத் தகவல். அண்மையில் சிவகங்கையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், ‘’பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை. அது மாற்றத்துக்கு அப்பாற்பட்டது’’ என்று பேசினார் சிதம்பரம். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு தொண்டர், ‘’அப்போ.. நீங்க’’ என்று கேட்க, ’’நானும்தான்.. நானும்தான்..’’ என அழுத்தமாகச் சொன்னார் சிதம்பரம்.
போட்டியா இல்லையா என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும் கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே தொகுதியை தேர்தலுக்கு தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார் சிதம்பரம். ஆனாலும், இந்த முறை சிதம்பரம் போட்டியிடும் மன நிலையில் இல்லை என்பதுதான் முக்கியச் செய்தி
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய சிவங்கை காங்கிரஸ் நிர்வாகிகள், “திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கவேண்டும் என சிதம்பரம் விரும்புகிறார். இன்னும்கூட அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் சிதம் பரத்துக்கு பிரதமராகும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படியொரு சூழலில், இங்கே கூட்டணி பலமில்லாமல் போட்டியிட்டு தோற்றுப் போனால் டெல்லி அரசியலில் ஓரங்கட்டி விடுவார்கள். அதனால்தான் தனக்குப் பதிலாக தனது மகனை களமிறக்க நினைக்கிறார் சிதம்பரம்’’ என்று சொன்னார்கள்.
காங்கிரஸ் மேல்மட்ட விவகாரங்களை அறிந்தவர்களோ, “காங்கிரஸ் வி.ஐ.பி.க்கள் யாரும் இம்முறை கொல்லைப்புற வழியாக நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது; மக்களிடம் ஓட்டு வாங்கித்தான் வரவேண்டும் என ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார்.
அதன்படி பார்த்தால் சிதம்பரமும் தேர்தலில் நின்றே தீரவேண்டும். ஆனால், பிரதமர் கனவில் இருக்கும் அவர், ’இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்கிறேன், தேர்தலுக்கான நிதி ஆதாரத்தை திரட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தலைமையிடம் வாக்குறுதி கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அதனால் சிதம்பரத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து, அவரை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ் தலைமை. எனவே, இப்போதுள்ள அரசியல் சூழலில் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டி யிடுவது சாத்தியமில்லை’’ என்று சொல்கிறார்கள்.