இந்தியா

பாஜக உறுப்பினர் சேர்க்கை; 6-ம் தேதி வாரணாசியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி: வாக்குச்சாவடி தோறும் 5 மரங்கள் நட வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பாஜக உறுப்பினர் சேர்க்கையை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பாஜக எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மாநிலங்களவை பாஜக எம்.பி. மதன்லால் சைனி மரணமடைந்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட  தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக வெற்றிக்கு பெரும் பங்காற்றிய கட்சித் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை கட்சியின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளான 6-ம் தேதி நாடுமுழுவதும் தொடங்குகிறது. பிரதமர் மோடி வாரணாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 மரங்களை பாஜக தொண்டர்கள் நட்டு பாராமரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பாஜக உறுப்பினர் சேர்க்கையை தெலங்கானா மாநிலத்தில் கட்சித் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைக்கிறார். கட்சியின் நிர்வாகிகள் நாட்டின் பல பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT