‘ஒருநாடு ஒரு ரேஷன் அட்டை’ திட்டத்தை 2020 ஜூன் 30ம் தேதிக்குள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் விதமாக ஒருநாடு ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இதனை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் அமல்படுத்தியாக வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ஆந்திரா, குஜராத், ஹரியாணா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே இதற்கான ஏற்பாடுகளை வழங்கி வருகிறது என்றார்.
“2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் நாடு முழுதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒரு நாடு ஒருரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்துவது கட்டாயம். மாநில அரசுகளுக்கு இதை துரிதப்படுத்துமாறு நாங்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம்.” என்று பாஸ்வான் தெரிவித்தார்.
அதாவது எந்த ஒருவரும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதால் அவருக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் போலி ரேஷன் அட்டைதாரர்களையும் இந்த முறை ஒழித்து விடும் என்கிறார் ராம்விலாஸ் பாஸ்வான்.
தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிஷா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உட்பட 11 மாநிலங்கள் இதனை சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும் காரணம் என்னவெனில் இங்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆஃப் சேல் எந்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மோடி 2.0 அரசின் முதல் 100 நாட்கள் ஆட்சித் திட்டத்தில் இதுவும் ஒன்று என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.
நவம்பர் 2016 முதல் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதில் பொருட்கள் மானிய விலையில் அதாவது கிலோவுக்கு ரூ1-3 என்ற விலையில் நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமானொருக்கு வழங்கப்பட்டு வருகிறது.