மும்பையில் ரயிலில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய 70 வயது பயணியை ரயில்வே போலீஸார் மீட்டு சிகிச்சைக் கொண்டு சென்று காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
மகேஷ் பரீக் (70), இவர் மும்பையில் உள்ள டாஷிஹரிலிருந்து வசாய்க்கு சிறப்புத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
போரிவல்லி ரயில்வே நிலையம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயில்நிலையத்திலிருந்த அரசு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மூன்று ஜிஆர்பி (அரசு ரயில்வே போலீஸ்) பணியாளர்கள் பரீக்கை சிகிச்சைக்காக அவசர மருத்துவ அறைக்கு (ஈஎம்ஆர்) கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இதுகுறித்து தெரிவிக்கையில், ''அவர் சரியான நேரத்தில் ஈ.எம்.ஆரை அடைந்தார், அவரது சிகிச்சையில் மேலும் தாமதம் ஏற்பட்டிருந்தால் அவரது நிலை மோசமாக இருந்திருக்கும்.'' என்றார்.
இச்சம்பவம் குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் பாட்டீல் தெரிவித்ததாவது:
பயணிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்ததால் பிளாட்பாரம் எண் 8ல் ரயில்நின்றபோது ரயில்வே காவல்துறை அதிகாரிகளான ஆர்.கே.உஜ்வால் மற்றும் சச்சின் காம்லே ஆகிய இருவரும் பணியில் இருந்தனர். அவர்களுடன் ஒரு ஜவானும் இணைந்து பாதிக்கப்பட்டவரை உடனடியாக அவசர மருத்துவ அறை இருந்த பிளாட்பாரம் எண்.3க்கு கொண்டுசென்றனர். தற்போது அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்.
இவ்வாறு மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.