ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தே கார் மாவட்டம், சாந்த்வா ஒன்றியம் சதுவாக் என்ற கிராமத்தைச் சேர்ந்த வர் சாந்தி தேவி (30). நான்கு மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 10 கி.மீ. தொலைவில் உள்ள சாந்த்வா சுகாதார மையத்துக்கு மோட்டார் பைக்கில் கொண்டுவரப்பட்டார். அதிக ரத்தப் போக்குடனும் மயக்க நிலையிலும் இருந்த அவர் பைக்கில் கொண்டுவரப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி யடையச் செய்தது.
இதுகுறித்து அவரது கணவர் கமல் கஞ்சு கூறும்போது, “எனது மனைவியை ஆம்புலன்ஸில் கொண்டுவர முயற்சி செய்தோம். ஆனால் சுகாதார மையத்தில் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டனர். 108-க்கு போன் செய்தும் பல னில்லை. அவரது உடல்நிலை மோச மானதால் வேறு வழியின்றி மோட்டார் பைக்கில் கொண்டு வந்தோம்” என்றார்.
சாந்தி தேவிக்கு ஏற்பட்ட துயரம் இத்துடன் நிற்கவில்லை. அவரை 27 கி.மீ. தொலைவில் லத்தேகாரில் உள்ள சர்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு சுகாதார மையத்தில் கூறிவிட்டனர். ஆனால் இம்முறை ஆம்புலன்ஸ் கொடுத்து உதவினர். இதையடுத்து சர்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாந்தி தேவியை டாக்டர்கள் மீண்டும் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இறுதியாக ரிம்ஸ் மருத்துவமனையில் சாந்தி தேவி அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளி ஒருவரை உயர் சிகிச்சை என்ற பெயரில் டாக்டர்கள் தட்டிக்கழிப்பது சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதில் தற்செயலான ஒரு விஷயம் என்னவெனில், இப் பெண்ணின் சதுவாக் கிராமம், தொகுதி எம்.பி.யால் முன்மாதிரி கிராமங்களுக்காக தேர்வு செய் யப்பட்ட 3 கிராமங்களில் ஒன்றாகும். மார்க்சிஸ்ட் பிரமுகரும் சமூக ஆர்வலருமான அயூப்கான் கூறும் போது, “முதலில் அப்பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது. பிறகு, லத்தேகார் துணை ஆணையர் தலையிட்ட பிறகும் சர்தார் மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றப்படவில்லை. சிகிச்சையை தாமதித்து அப்பெண்ணின் உயிருடன் டாக்டர்கள் விளை யாடியுள்ளனர். அரசு சுகாதாரத் துறைக்கு இது வெட்கக்கேடானது” என்றார்.
லத்தேகார் சிவில் சர்ஜன் எஸ்.பி. சர்மா கூறும்போது, “சுகாதார மையத்தில் ஒன்று, 108-ல் ஒன்று என சாந்த்வாவில் 2 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதுதவிர கர்ப்பிணிப் பெண்களுக்காக மம்தா வாகனம் உள்ளது. என்றாலும் அப்பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.