இந்தியா

கடவுளே ஏற்காத முத்தலாக் நடைமுறையை சட்டங்கள் மூலம் நியாயப்படுத்த முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

முத்தலாக் என்பதை கடவுளே ஏற்காத போது சட்டங்கள் இயற்றி அதை நியாயப்படுத்த முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வின் முன் வாதிடும் போது, “முத்தலாக் என்பது பெண்களுக்கு எதிரானது. இந்தச் செயல் கடவுளாலேயே அருவருத்து ஒதுக்கப்பட்டது. எனவே மனிதன் அதற்காக எவ்வளவு வாதிட்டாலும் அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது.

ஒரு பெண் அவர் பெண் என்பதற்காகவே பாகுபாட்டுடன் நடத்த முடியாது, சட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்துக்கானதே. மதச்சார்பின்மை என்பது சட்டத்திற்குக் கீழ் மதத்தை வைப்பது. எனவே முத்தலாக விவகாரத்தை அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 13-ன் கீழ் அணுக வேண்டும்” என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி கேஹர், “முத்தலாக் விவகாரத்தில் பரஸ்பர ஒப்புதல் என்ற ஒன்று இருப்பதில்லை” என்றார்.

மேலும் அவர் கூறும்போது மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றை வைத்து வேறுபடுத்திப் பார்ப்பதை சட்டப்பிரிவு 15 தடை செய்கிறது. ஆனால் இது அரசமைப்புச் சட்டம், ஆனால் இங்கு நம் முன் நிற்கும் விவாதம் தனிமதச்சட்டம் பற்றியது என்றார்.

இதற்கு ஜேத்மலானி, “எந்த ஒரு சட்டமாகட்டும் ஆண் ஒருவர் தன் இஷ்டத்துக்கு பெண்ணை விவாகரத்து செய்து விட முடியுமா என்ன?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.

இவ்விவகாரத்தில் கோர்ட்டுக்கு தன் சொந்தத் திறனில் உதவி வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித், “முத்தலாக் பாபகரமானது என்கிறது இஸ்லாம் ஆனாலும் அனுமதிக்கக் கூடியதே என்கிறது” என்றார்.

இதற்கு அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி குரியன் ஜோசப், “கடவுளால் பாபகரமானது என்று கூறப்பட்ட ஒன்றை மனிதன் சட்டங்களால் நியாயப்படுத்த முடியுமா?” என்றார்.

இதற்கு குர்ஷித் பதில் கூறும்போது, “அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மட்டுமே இதற்குப் பின்னால் உள்ள இஸ்லாமியத்தின் பல்வேறு தத்துவப் பள்ளிகள் குறித்த விளக்கம் அளிக்க முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT