இந்தியா

முத்தலாக் நடைமுறையை ஏற்பது குறித்து பெண்கள் முடிவெடுக்க வாய்ப்பு உண்டா? - தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

எம்.சண்முகம்

‘நிக்கா நாமா’ எனப்படும் திருமண ஒப்பந்தத்தின்போது, முத்தலாக் நடைமுறையை ஏற்பது குறித்து பெண்கள் முடிவெடுக்க வாய்ப்பு வழங்க முடியுமா? என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முத்தலாக் வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. ஐந்தாவது நாளாக நேற்று நடை பெற்ற விசாரணையின்போது, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் ஆஜரான கபில் சிபல், ‘முஸ்லிம்களின் தனிநபர் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் இங்கு விசாரிப்பதே தவறு. பாதிக்கப்பட்ட யாராவது உங்களிடம் முறையிட்டிருந்தால் விசாரிக்கலாம். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பது தவறானது’ என்றார்.

அதற்கு நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ‘பாதிக்கப்பட்ட பெண்கள் மனு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் இந்த வழக்கு நடைபெறுகிறது’ என்றார். உடனே கபில் சிபல், ‘இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகுதான் பாதிக்கப்பட்ட சிலர் நீதிமன்றத் துக்கு வந்துள்ளனர்’ என்றார். அப்போது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ‘நிக்கா நாமா என்பது திருமண ஒப்பந்தம் என் கிறீர்கள். அந்த ஒப்பந்தத்தின்போது முத்தலாக் நடைமுறையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து ஒரு தாளைப் பெண்களிடம் கொடுத்து அவர்களது சம்மதத்தைப் பெற முடியுமா? இதுகுறித்து அனைத்து காஸிக்களுக்கும் அறிவுறுத்த முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கபில்சிபல், ‘மிகவும் சிந்திக்கக்கூடிய யோசனை. இது குறித்து முஸ்லிம் சட்ட வாரியம் தீவிரமாக ஆலோசிக்கும்’ என்றார்.

நீதிமன்றம் மீது நம்பிக்கை

அவர் தொடர்ந்து வாதிடும் போது, ‘அழிந்து கொண்டிருக்கும் முத்தலாக் நடைமுறை குறித்து மதச்சார்பற்ற உச்ச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் விசாரிப்பது நல்லதல்ல. முஸ்லிம் மக்களால் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கும் முத்தலாக், பலதார மணம் ஆகிய நடைமுறைகளில் நீதிமன்றமும் மத்திய அரசும் தலையிடுவது மீண்டும் இவற்றை உறுதியாக இறுக்கிப் பிடிக்க வழிவகுக்கும். முஸ்லிம்கள் கழுகால் வேட்டை யாடப்படும் சிறு பறவைகள் போன்றவர்கள். அவர்களைப் பாது காக்க வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தின் முன் நிற் கின்றனர்’ என்றார்.

ஜமாத்-உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதிடும்போது, ‘கடந்த 1954-ல் இயற்றப்பட்ட சிறப்பு திருமணச் சட்டத்தின்படி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனிநபர் சட்டத்தில் இருந்து விலகி இருக்க உரிமை உண்டு. ஒரு நபர் தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால், அவர் சிவில் சட்டத்தில் இருந்து விலகி, மனப்பூர்வமாக தனிநபர் சட்டத்தை ஏற்கிறார் என்றே அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில், தனிநபர் சட்டம் குறித்து புகார் தெரிவிக்கவோ, பாரபட்சமாக இருக்கிறது என்று கூறவோ இடமில்லை’ என்று குறிப்பிட்டார்.

உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு

முஸ்லிம் அமைப்புகளின் வாதத்திற்கு பதிலளித்து அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, ‘முஸ்லிம் மதத்தின் அடிப் படைகளில் ஒன்றே முத்தலாக் என்று வாதிடுவதை ஏற்க முடியாது. இந்து மதத்தில் ‘சதி’ எனப்படும் உடன்கட்டை ஏறுதல், சிசுக் கொலை, தேவதாசி முறை ஆகியவை ஒழிக்கப்பட்டும் இந்து மதம் பிழைத்திருக்கவில்லையா?’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘இவை யெல்லாம் சட்டங்கள் மூலம் ஒழிக் கப்பட்டன. அதுபோல நீங்கள் முத்தலாக் நடைமுறையை ஒழிக்க வும் சட்டம் கொண்டு வரலாமே’ என்றனர். முகுல்ரோத்கி தொடர்ந்து வாதிட்டபோது, ‘நாங்கள் சட்டம் கொண்டு வர தயார். அதற்கு முன் பாக அரசியல் சாசன அடிப்படை உரிமைகளான சம உரிமை, கவுரவ மாக வாழும் உரிமை ஆகியவை மீறப்படுவது குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். அடிப்படை உரிமைகள் மீறப்படும் நிலை வந்தால், தனிநபர் சட்டங் கள் வழிவிட வேண்டும்’ என்று வாதிட்டார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT