இந்தியா

முத்தலாக் வழக்கப்படி 3 முறை விவாகரத்தான பெண்: 4-வது திருமண உறவை காப்பாற்ற முயற்சி

செய்திப்பிரிவு

உ.பி.யின் பரேலியில் முத்தலாக் வழக்கப்படி மூன்றுமுறை விவாகரத்து அளிக்கப்பட்ட பெண், தனது 4-வது திருமண உறவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி அதித்யநாத்தை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

மேற்கு உ.பி.யின் பரேலியைச் சேர்ந்தவர் தாரா கான் (34). இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் தாஹாகா நகரியா கிராமத்தைச் சேர்ந்த ஜஹீத் கானுடன் திருமணம் நடைபெற்றது. ஏழு வருட இல்வாழ்க்கைக்கு பிறகு, குழந்தை இல்லாததைக் காரணம் காட்டி தாராவிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்தார் ஜஹீர். பிறகு அவர் மற்றொரு இளம் பெண்ணை மணந்து கொண்டார்.

இதன்பிறகு குன்ஸா கிராமத்தைச் சேர்ந்த பப்பு கான் என்பவருக்கு தாராவை அவரது அத்தை திருமணம் செய்துவைத்தார். தாராவை பப்பு கான் தவறான வழிக்கு தூண்டியுள்ளார். இதற்கு மறுத்த தாராவிடம் முத்தலாக் முறையில் மூன்று வருட உறவை முறித்தார் பப்பு. மீண்டும் தாய்மாமன் வீடு திரும்பிய தாராவுக்கு மன தைரியம் அளித்து மூன்றாவதாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கணவரான சோனு கான், மனைவி தாராவை அவரது முந்தைய இருமண வாழ்க்கையை குறிப்பிட்டு அன்றாடம் சித்திரவதை செய்துள்ளார். இத்துடன் சோனுவும் 4 மாதத்துக்கு பிறகு முத்தலாக் முறையில் தாராவை விரட்டி விட்டுள்ளார்.

நான்காவதாக தீவிர முயற்சிக்கு பிறகு தாராவை அவரது தாய்மாமன் பரேலியின் ஷம்ஷாத் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார். மனைவியை இழந்த ஷம்ஷாத் 3 குழந்தைகளுக்கு தந்தை ஆவார். இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு தற்போது தாராவுக்கு இந்த வாழ்க்கையும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தாரா கான் தொலைபேசியில் கூறும்போது, “எனது முன்னாள் 3 கணவர்கள் போலவே ஷம்ஷாத்தின் நடவடிக்கையும் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, எனது பெற்றோரிடம் இருந்து பணம் கொண்டு வருமாறு என்னைக் கடந்த மாதம் வீட்டை விட்டு விரட்டி விட்டார். இதையடுத்து வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அவர் மீது புகார் அளித்துள்ளேன். இவரும் என்னிடம் 3 முறை தலாக் கூறிவிடாமல் இருப்பதற்காக பிரதமர் மோடி, முதல்வர் யோகியை சந்திக்க வேண்டி மனு அனுப்பியுள்ளேன். முஸ்லிம் பெண்களுக்கு உதவுவதற்காக இவர்கள் முத்தலாக் முறையை எதிர்ப்பதாக அறிகிறேன். எனது 12 வருட மணவாழ்க்கைகளின் அனுபவம் மிகவும் மோசமாகி விட்டது” என்றார்.

தாராவின் புகாரைப் பெற்ற பரேலியின் சிவில் லைன் காவல்நிலைய போலீஸார் ஷம்ஷாத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இருவரது மணவாழ்க்கை முறிந்து விடாமல் இருக்க அவர்களுக்கு அருகிலுள்ள அரசு குடும்பநல மையத்தில் ‘கவுன்சிலிங்’ செய்ய பரிந்துரைத்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’விடம் ஷம்ஷாத் கூறும்போது, “என் மீது தாரா பொய் புகார்களைக் கூறுகிறார். அவருடன் இணைந்து வாழ நான் தயாராக இருக்கிறேன். ஓட்டுநரான நான் தற்போது வெளியூரில் உள்ளேன். பரேலி திரும்பியவுடன் தாராவை சந்தித்து பேசுவேன்” என்றார்.

முதல் திருமண முறிவுக்கு பிறகு தாரா மீது அவரது ஐந்து சகோதரர்களும் அக்கறை காட்டாமல் கைவிட்டுள்ளனர். இதனால், தனது தாய் மாமன் வீட்டிலேயே வசித்து வரும் தாரா, பள்ளிப் படிப்புக்கான வாய்ப்பும் பெறாதவர் ஆவார்.

          
SCROLL FOR NEXT