முத்தலாக் என்பது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும். அதேநேரம் முஸ்லிம்களின் பல தார திருமணம் குறித்து விசாரணை நடத்தாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வாய்மொழியாக மூன்று முறை தலாக் என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் நடைமுறை இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து ஷாயரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இதுதவிர, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, இம்மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்தலாக் வழக்கைப் பொறுத்தமட்டில், இந்த அமர்வு விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன் விவரம்:
1. முத்தலாக் நடைமுறை இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக உள்ளதா?
2. முத்தலாக் என்பது முக்கியமான மத நடைமுறை என்றால், அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அமல்படுத்த வேண்டிய அம்சமா?
3. பல தார மணம் மற்றும் நிக்கா ஹலாலா போன்ற விஷயங்கள் குறித்து விசாரணை நடத்த மாட்டோம்.
முத்தலாக் நடைமுறையின் சட்ட அங்கீகாரம் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும்.
4. முத்தலாக் நடைமுறை மத அடிப் படைகளில் ஒன்று என்றும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும் என்றும் நாங்கள் முடிவுக்கு வந்தால் அதில் தலையிட மாட்டோம்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் முத்தலாக் நடை முறையை எதிர்த்து வாதிடுபவர்களுக்கு மூன்று நாட்களும், ஆதரித்து வாதிடுப வர்களுக்கு மூன்று நாட்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கக்கூடாது என்று மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி போர்க்கொடி உயர்த்தியுள்ளது. முத்தலாக் வழக்கு விசாரணையை அறிந்து கொள்ள அந்த அமைப்பின் நிறுவனர் முகமது சையது நூரி நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்தார்.