இந்தியா

அமைச்சர் மீதான லஞ்சப் புகாரில் மறைப்பதற்கு ஏதுமில்லை: உம்மன் சாண்டி

பிடிஐ

கேரளத்தில் அமைச்சர் மீதான லஞ்சப் புகார் விவகாரத்தில் அரசிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

கேரளத்தில் மூடப்பட்ட 418 மதுக்கூடங்களை (பார்கள்) மீண்டும் திறப்பதற்கு மாநில நிதியமைச்சர் கே.எம்.மணிக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்ததாக பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜு ராஜேஷ் கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “இந்தப் புகார் தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் என்று அச்சுதானந்தன் கூறினார். உடனே அதை நாங்கள் ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டோம். ஆனால் இப்போது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறார் அச்சுதானந்தன். இதன் மூலம் அவர் தனது கோரிக்கையில் பின்வாங்கிவிட்டார்.

அரசு தனது கோரிக்கையை ஏற்காது என்று நினைத்த அவர் தற்போது மாறுபட்டு பேசுகிறார்.

சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று அச்சுதானந்தன் விரும்பினால், இக்கோரிக்கை தொடர்பாக அவர் கடிதம் தரட்டும் பார்க்கலாம். இந்த விவகாரத்தில் எங்களிடம் அச்ச உணர்வு இல்லை. இதுபோல் மறைப்பதற்கும் எதுவுமில்லை” என்றார்.

அரசுக்கு எதிராக இந்தப் புதிய குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துவரும் உம்மன் சாண்டி, இது ஆதாரமற்ற புகார் என்கிறார்.

இந்நிலையில் விசாரணை கோருவதில் மார்க்சிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்து நிற்பதாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

“அச்சுதானந்தன் சிபிஐ விசாரணை கோருகிறார். ஆனால் அக்கட்சியின் அரசியல் விவாகரக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி நீதித்துறை விசாரணையும், கட்சியின் செயலாளர் பினராயி விஜயன் உள்ளூர் போலீஸ் விசாரணையும் கோருகின்றனர்” என்றார் சென்னிதலா.

SCROLL FOR NEXT