இந்தியா

முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாமா?- யோசனை கோரியது உச்ச நீதிமன்றம்

பிடிஐ

முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே வழங்கலாமா என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் யோசனை கோரியுள்ளது.

முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) 5-வது நாளை எட்டியுள்ளது.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள், "முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பெண்களுக்கு திருமண ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே வழங்கலாமா? திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா? இது தொடர்பாக விளக்கமளியுங்கள். அதேவேளையில் எங்கள் பக்கத்தில் இருந்து எந்த ஊகங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று கூறினர்.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு இணையானது முஸ்லிம்கள் முத்தலாக் முறை மீது கொண்டுள்ள நம்பிக்கை என உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT