இந்தியா

முக்கிய முடிவுகளை எங்களுடன் ஆலோசிக்க வேண்டும்: மகாராஷ்டிர பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை

பிடிஐ

மும்பைக்கு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பது போன்ற எந்த மிகப் பெரிய முடிவானாலும் அதனை சிவசேனாவிடம் ஆலோசிக்காமல் எடுக்கக்கூடாது என்று அந்த கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய நகரமான மும்பையின் நிர்வாகத்தை மேம்படுத்த அதற்கு சிறப்பு தனி தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசித்து வருகிறார்.

இந்த நிலையில் இதனை எதிர்க்கும் சிவசேனா பாஜக-வுக்கு இது தொடர்பான எச்சரிக்கையை தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா மூலம் தலையங்கமாக வெளியிட்டுள்ளது.

அதில், "தற்போதைய மகாராஷ்டிர முதல்வர் மாநிலத்துக்காக பெரிய திட்டங்களை மனதில் வைத்துள்ளார். ஆனால் எந்த முடிவையும் எங்களை கேட்காமல் அவர்கள் (பாஜக) எடுக்கக் கூடாது. மகாராஷ்டிர தலைநகரம் குறித்த முடிவுகள் தன்னிச்சையாக நடந்தால் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

மும்பைக்கு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பதன் மூலம் முதல்வர் என்ன சாதிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் மும்பைவாசிகளின் சாபத்தை சம்பாதித்துவிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த திட்டம் மூலம் மும்பையின் பிரச்சினையை அதிகரிக்கத் தான் முதல்வர் முயற்சி செய்கிறார். மும்பைக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பதன் மூலம் மாநிலத்திலிருந்து அந்த நகரத்தையே பிரிக்க பாஜக திட்டமிடுவது நன்றாக தெரிகிறது.

விதர்பா தொடர்பாகவும் அவர்கள் இதே நிலைப்பாட்டில் இருக்கின்றனர். நாங்கள் நிச்சயம் இதனை எதிர்ப்போம்" என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT