இந்தியா

மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்தது: சமையல் எரிவாயு மானியம் குறைப்பு - கிலோவுக்கு ரூ.20 மட்டுமே

செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன்படி, கிலோவுக்கு ரூ.20 மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். எனினும், மானிய விலை சிலிண்டர்களின் விலையில் இப்போதைக்கு மாற்றம் இருக்காது.

அதேநேரம், சர்வதேச சந்தை யில் விலை அதிகரித்தால் கூடுதல் செலவை ஏற்குமாறு எண்ணெய் நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளும். அல்லது வாடிக்கை யாளர் மீது திணிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டரின் சந்தை விலைக்கும் வாடிக்கையாளருக்கு வழங்கப் படும் மானிய விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசும் எண்ணெய் நிறு வனங்களும் ஏற்றுக் கொண்டன. அதாவது இந்த வித்தியாசத் தொகையில் யார் எவ்வளவு தொகையை ஏற்பது என்பது குறித்து நிதியமைச்சகமும் எண்ணெய் அமைச்சகமும் பேசி முடிவு செய்து வந்தன.

இனி, ஒரு கிலோ எரிவாயுவுக்கு ரூ.20 மட்டுமே மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீதம் உள்ள தொகையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும்.

இதன்படி, இப்போது 14.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் சந்தை விலை டெல்லியில் ரூ.810 ஆக உள்ளது. மானிய விலை சிலிண்டர் விலை ரூ.417. அதாவது ரூ.393 மானியமாக வழங்கப்படுகிறது.

புதிய நடைமுறையின்படி, மத்திய அரசு ரூ.284-ம், எண்ணெய் நிறுவனங்கள் ரூ.109-ம் மானியமாக வழங்கும். இந்த நடைமுறை வரும் மார்ச் மாத இறுதி வரை அமலில் இருக்கும். அதன் பிறகு சந்தை நிலவரத்துக்கேற்ப மானியம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.

5 கிலோ சிலிண்டருக்கும் மானியம்

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

சமையல் எரிவாயு சிலிண்ட ருக்கு அரசு வழங்கும் மானியத் தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் எரிவாயு மீதான அரசின் செலவு 15 சதவீதம் வரை குறையும்.

மேலும் பெட்ரோல் பங்க்குகள் மூலம் வழங்கப்படும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்களையும் மானிய விலையில் வழங்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும். இதனால் ஏழைகள் பயன்பெறுவார்கள்.

மேலும் சமையல் எரிவாயு மானி யத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் (நேரடி பணப் பரிமாற்றம்) மீண்டும் செயல்படுத்தப்படும்.

அதேநேரம் ஆதார் அட்டை இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால் முறைகேடுகளை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT