ஓராண்டுக்கு முன்பாக ஆர்பிஐ கவர்னராக உர்ஜித் படேல் உயர்த்தப்பட்ட போது, அவரைப் பரிந்துரை செய்த குணாம்சங்களில் அவரது நேர்மறையான அணுகுமுறை, துறைச்சார்ந்த அறிவுத்திறன், தன் மேல் வெளிச்சம் விழாமல் பார்த்துக் கொள்ளும் தன்மை ஆகியவை விதந்தோதப்பட்டன. புருவம் உயர்த்தும் மேட்டுக்குடி வளாகங்களில் அவர் பெரும்பொருளாதாரத்தில் பயிற்சி பெற்றவர். லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸில் பட்டம் வென்றவர். பன்னாட்டு நிதியத்தின் உள்நாட்டு பிரதிநிதியாக புதுடெல்லியில் இருந்த பொது 1991-ம் ஆண்டு பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை அருகில் இருந்து நெருக்கமாகக் கண்காணித்தவர்.
2013 முதல் ஆர்பிஐ-யின் துணை கவர்னராக இருந்தது முதல் டெல்லியுடன் அதிகபட்ச கூடுகை கொள்கையில் நன்றாகவே திகழ்ந்தார். உர்ஜித் படேலின் பொருளாதாரத் தத்துவத்துக்கு நெருக்கமானவர்களுக்கு ஆர்பிஐ கவர்னராக உர்ஜித் படேலைத் தெரிவு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவரது தொழில்பூர்வ வாழ்க்கையில் ஒருநாளும் சாகசத்திற்கான எந்த ஒரு விருப்பையும் வெளிப்படுத்தியதில்லை, தான் ஒரு பாரம்பரியவாதி என்ற நிலையமைதியுடனேயே அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
எந்த ஒரு குறுகிய பார்வை கொண்ட சந்தர்பவாத ஆட்சியாக இருந்தாலும் தேர்தல் கணக்கீடுகள் செல்வாக்கு செலுத்தும் கொள்கைகளை விட பொருளாதார ரீதியாக ஆரோக்கியமான கொள்கைகளையே அரசு தேர்ந்தெடுக்குமாறு நிறுவன ரீதியான சரிபார்ப்பு முறை ஒன்றை ஏற்படுத்துவதில் வலுவான நம்பிக்கை கொண்டவர்.
வட்டி விகிதத்தை கடுமையாகக் குறைப்பது மற்றும் பிற கடுமையான எதிர்பார்ப்புகளில் ரகுராம் ராஜன் போல் இவரும் டெல்லியின் கொள்கைகளுக்கு செவிசாய்க்க மாட்டார் என்றே எண்ணப்பட்டது. ஆர்பிஐ-யில் உர்ஜித் படேல் முன்னர் செலவிட்ட பதவிக்காலத்தில் இத்தகைய அரசியல் நெருக்கடியிலிருந்து நிதிக்கொள்கையை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதாகவே இருந்தது. ரகுராம் ராஜனுக்கு எதிராக கடும் பிரச்சாரங்கள் தலைதூக்கிய போது, அவரது நேர்மையைக் கேள்விக்குட்படுத்தும் பிரச்சாரங்கள் தலைவிரித்தாடிய போது நிச்சயம் ரகுராம் ராஜனுக்கு மாற்றாக வருபவர் டெல்லியுடன் ஒத்துப்போகும் நபராகவே இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அத்தகைய பிம்பத்துக்கும் பொருத்தமில்லாதவர்தான் உர்ஜித் படேல்.
எதிர்பார்ப்புகளுக்கு இணங்க அவர் வட்டி விகித விவகாரத்தில் மத்திய அரசின் வழிமுறைகளுக்கு ஒத்து ஊதவில்லை. சில வேளைகளில் முறையற்ற கொள்கைகளை சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களுக்கு எதிராக பொதுவெளியில் பேசியும் வந்தார் உர்ஜித் படேல். விவசாயக் கடன் குறித்த யோகி ஆதித்யநாத் அறிவிப்புக்குப் பிறகு இவர் மிகவும் தைரியமாக கடன் தள்ளுபடி குறித்து தன் கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தார். ஆனாலும் கவர்னராக இவரது முதலாம் ஆண்டு வழக்கத்துக்கு மாறானது, வழக்கமான கணக்கீடுகளின் படி கணிக்க முடியாதது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை உர்ஜித் படேல் மீது கவனத்தை குவித்தது.
ஏதாவது ஒழுங்கற்று நடந்தால் அதற்கு எதிரான குரல் எழுப்புபவராக ரகுராம் ராஜன் அறியப்பட்டவர். என்ன சூழ்நிலை, என்ன நடக்கிறது, இது எப்படியிருக்க வேண்டும் என்று உடனடியாக ராஜன் தெளிவுபடுத்தி விடுவார். உதாரணமாக மறைந்திருக்கும் வாராக்கடன்களுக்காக வங்கி கணக்கு நிலவரங்கள் சரிகட்டப்படும் நடைமுறையைக் கையாண்டார், இத்தகைய நடைமுறையை அவர் கையிலெடுக்காவிட்டால் வாராக்கடன் விவரங்கள் தெரியாமலேயே போயிருக்கக் கூடும். ஆனால் பொதுவெளியில் உர்ஜித் படேல் மிகவும் குறைவாகவே பேசுகிறார். ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு திறனற்ற, செயல்படாத வழிமுறை என்று நினைத்தாரா என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, நலிவுற்றவர்களையும், நேர்மையானவர்களையும் சோதிக்கும் நேயமற்ற அநீதியான நடவடிக்கை என்று அவர் பார்தாரா என்பதும் தெரியவில்லை. மொத்தமாக மக்களிடத்தில் தேவையில்லாத பொருளாதார கடினப்பாடுகளை பணமதிப்பு நீக்கம் உருவாக்கியது என்று நினைக்கிறாரா என்பதும் நமக்குத் தெரியவில்லை. மொத்தத்தில் படேலின் மவுனம் புதிராகவே உள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் அரசுக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் அதிகாரம் ஆர்பிஐ-க்கு இல்லை, ஏனெனில் ஆர்பிஐ பணப்புழக்க மேலாண்மையில் சட்ட ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்ய கால அவகாசம் கேட்க முயற்சி செய்தாரா உர்ஜித் படேல்?
பணமதிப்பு நீக்கத்தில் ஆர்பிஐ-யின் பங்கு என்னவென்பது இன்று வரை தெளிவாகப் புலப்படவில்லை. பங்கேற்பாளரா, அல்லது அருகில் இருந்து வேடிக்கை பார்த்ததா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. பணமதிப்பு நீக்கம் குறித்த அனைத்து தகவல்களும் தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் முடக்கப்பட்டுள்ளன. செய்திநிறுவனம், தகவலுரிமைச் சட்டம், நாடாளுமன்றக் குழு என்று எதன் மூலமாகவும் பணமதிப்பு நீக்கம் குறித்த கேள்விகள் ஊக்குவிக்கப்பட மாட்டாது. தொடக்கத்தில் ஆர்பிஐ வெளிப்படையாக இருந்தது. தடைசெய்யப்பட்ட நோட்டுகள் பற்றிய விவரங்கள் தினசரி அடிப்படையில் தகவலளித்தது ஆர்பிஐ. தகவலுரிமைச் சட்ட கேள்விகள் சிலவற்றுக்கு பதிலும் அளித்து வந்தது. ஆனால் உடனே மூடுதிரை விழுந்தது. தற்போது டெல்லியின் உத்தரவுகளுக்கு தொடர்ந்து அடிபணிந்து வருகிறது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை டெபாசிட் செய்ய கடைசி நாள் டிசம்பர் 30. சில மாதங்கல் ஆகியும் மத்திய வங்கி இன்னமும் உள்ளே வந்த தொகையை எண்ணி முடிக்கவில்லை. கணக்கை அதனால் கொடுக்க முடியவில்லை. தாமதம் மெத்தனம் மட்டுமல்ல, பணமதிப்பு நீக்கம் அதன் குறிக்கோளில் வெற்றியடைந்ததா இல்லையா என்பதை ஆதாரபூர்வமாக மதிப்பிட முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது. தரவுகள் இல்லாமல் எவ்வளவு கறுப்புப் அணம் ஒழிக்கப்பட்டது, (அப்படி ஏதாவது ஒழிக்கப்பட்டிருந்தால்) என்பதை மதிப்பிட முடியாது.
பணமதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்திய விதத்தில் உள்ள குறைபாடுகள், விடுபட்ட எண்ணிக்கைகள் ஆகியவை குறித்த குறைபாடுகளுக்கு ஆர்பிஐ பொறுப்பேற்றுள்ள தருணத்தில் அதன் பிம்பம் தற்போது சற்றே பின்னடைவு கண்டுள்ளது. படேல் என்ற நபரின் புகழுக்கும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட கவர்னரை பொதுவெளியில் கேலி பேசுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கிடையே பணமதிப்பு நீக்கத்தினால் பாஜக மிகப்பெரிய தேர்தல் ஆதாயங்களை அடைந்துள்ளது. அதாவது ஊழல் வாதிகளை தண்டிப்பதான அதன் உத்தேசமான வெற்றிகளில் அது வலம் வந்தது. அரசியல் புகழ் வளர்ச்சியடையும் அதே வேளையில் நம்பத்தகுந்த நிறுவனம் ஒன்றின் (ஆர்பிஐ) நம்பகத்தன்மையும் அரித்தெடுக்கப்பட்டது.
எனவே இந்தக் கேள்வியை கேட்க வேண்டும்: அரசுதான் பணமதிப்பு நீக்கம் என்ற கருத்தின் ஆசிரியர் என்றால் ஆர்பிஐ அதற்கான விமர்சனங்களை ஏன் ஏற்க வேண்டும்?
இந்தச் சூழலில்தான் பணமதிப்பு நீக்கம் குறித்த உர்ஜித் படேலின் தொடர்ச்சியான மவுனம் இந்தியாவின் மதிக்கக்கூடிய ஒரு நிறுவனமான ஆர்பிஐ-யை அரசியல் விவகாரத்தின் மையத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
பூஜா மெஹ்ரா டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்
தமிழில் ஆர்.முத்துக்குமார்.