இந்தியா

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு இணையானது முத்தலாக் நம்பிக்கை: கபில் சிபல்

பிடிஐ

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு இணையானது முஸ்லிம்கள் முத்தலாக் முறை மீது கொண்டுள்ள நம்பிக்கை என உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

மேலும், முத்தலாக் முறை 1400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நம்பிக்கை என்பதால் அது அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கே இடமில்லை என உச்ச நீதிமன்றத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தரப்பில் அவர் தெரிவித்தார்.

முத்தலாக் விவாகரத்து நடைமுறைக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாளாக நடைபெற்றது. அப்போது அனைத்திந்திய முஸ்லிம் தனி நபர் வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், "முத்தலாக் முறை 1400 ஆண்டுகளாக முஸ்லிம்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. அதை முஸ்லிம் விரோதப் போக்கு என்று நிர்ணயிக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அது நம்பிக்கை சார்ந்தது. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு இணையானது முஸ்லிம்கள் முத்தலாக் மீது கொண்டுள்ள நம்பிக்கை. எனவே, இது அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதுதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பதற்கோ இல்லை சமமான சட்டம் தேவை என்று வாதாடவோ எந்தத் தேவையும் இல்லை" எனக் கூறினார்.

மேலும் முத்தலாக் முறை என்பது முகமது நபி காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டதாக குரான் புனித நூலில் கூறப்பட்டிருப்பதாகவும் கபில் சிபல் வாதாடினார்.

முன்னதாக நேற்று நடந்த விசாரணையின்போது, முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் என்று கூறி, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால் முஸ்லிம் விவாகரத்துக்கு மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT