முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகளும் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் எம்.பி.யுமான மிசா பாரதியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
புதுடெல்லியின் கித்தோர்னி, பிஜ்வாசான், சைனிக் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மிசா பாரதியின் கணவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகின்றன.
சட்டவிரோத பணப் பரிவத்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஷெல் நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சுரேந்திர குமார் ஜெயின், விரேந்திர ஜெயின் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கும் மிசா பாரதிக்கும் அவரது கணவரும் நடத்தி வந்த மிஷாலி பிரின்டர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றுவருகிறது.
மிஷாலி பிரின்டர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் நிறுவனத்திலிருந்து 1,20,000 பங்குகளை 4 ஷெல் கம்பெனிகள் மூலம் மிசா பாரதி வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக ராஜேஷ் அகர்வால் என்ற கணக்காளரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மிசா பாரதியின் வங்கிக் கணக்குகளை பராமரித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.