சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக லோக்பால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் தொடர்புடையவர்களை வீட்டுக்கு வரவழைத்து சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டதால், அந்த வழக்கிலிருந்து ஒதுங்கி இருக்கும் படி ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்து விட்டது. ஆனால் இந்த உத்தரவுக்குப் பிறகும் ரஞ்சித் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் ரஞ்சித் சின்ஹாவின் பதவிக் காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பாக புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணிகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை முடுக்கி விட்டுள்ளது.
லோக்பால் சட்ட விதிகளின்படி, சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமித்தபோது, தேர்வுக்குழு பரிந்துரை மீறப்பட்டுள்ளது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விதி களைப் பின்பற்றி புதிய சிபிஐ இயக்குநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், லோக்பால் விதி களின்படி, பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பிரச்னைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு லோக்பால் சட்ட விதிகள் மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் அமைவு சட்டம், 1946 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு அதிகாரி களை தேர்வு செய்யும் குழுவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற வகையில் லோக்பால் சட்ட விதிகள் திருத்தப்பட உள்ளன. இந்த திருத்தம் இன்று கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட உள்ளது.
இந்த திருத்தம் மேற்கொண்ட பின்னர் சிபிஐ இயக்குநர் பதவிக்கு பொருத்தமான உயர் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு, உள் துறை அமைச்சகம், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை மூலம், பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இக்குழு திறமையானவரை பரிந்துரை செய்யும். அதன் பின்னரே புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் கூறினர்.