கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி குணால் கோஷ் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சாரதா சீட்டு நிறுவன மோசடியில் தொடர்புடையதாக திரிணிமூல் காங்கிரஸ் எம்.பி குணால் கோஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கையாக கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குணால் கோஷ் தான் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிவித்ததாக சிறை மருத்துவர்கள் கூறினர். மேலும் மருத்துவர் கூறுகையில், "குணால் கோஷை பரிசோதித்தபோது அவரது உடல் நிலை இயல்பாகவே இருந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்" என்றனர்.
கடந்த 10-ம் தேதி மாநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குணால் கோஷ், வழக்கில் சில சக்திகள் சாட்சியங்களை திசை திருப்ப முயற்சி செய்கின்றன. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.