இந்தியா

படூரியா நகரில் நிகழ்ந்த கலவரம் குறித்து நீதி விசாரணை: மேற்கு வங்க அரசு அறிவிப்பு

பிடிஐ

மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பசீர்ஹத் தாலுகா, படூரியா நகரில் நிகழ்ந்த மதக் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒரு மதத்தினரின் புனிதத் தலம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து முகநூலில் வெளியானதை தொடர்ந்து, படூரியா நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு கலவரம் வெடித்தது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட பிறகும், வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல், தீவைப்பு உள்ளிட்ட வன்முறைகள் தொடர்ந்தன.

இதையடுத்து சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் போலீஸாருக்கு உதவியாக துணை ராணுவப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் படூரியா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இப்பகுதிகளில் நேற்று கடைகள், சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்க மான அளவில் இருந்தது. இப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமில்லை என உயரதிகாரி ஒருவர் கூறினார்.

என்றாலும் இணையதள சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “படூரியா கலவரம் குறித்து விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியில் இருக்கும் நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். கலவரத் துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டி.வி. சேனல்கள் சிலவற்றில் போலி வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தில் இவற்றின் பங்கு குறித்தும் விசாரிக்கப்படும்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற் றும் நோக்கில் நாட்டின் கூட்டாட்சி முறையை பாஜக அழிக்க முயற்சிக் கிறது. எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பு வகிப்பது மத்திய அரசுதான். அப்படி இருக்கும்போது எல்லைக்கு அப்பாலிருந்து எப்படி கலவரத்தை உருவாக்க வெளியாட்கள் மாநிலத்துக்குள் ஊடுருவ முடியும்? மாநிலத்தில் அமைதி சீர்குலைய வேண்டும் என்பது பாஜகவின் சதித்திட்டம்.

கலவரம் ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல பாஜக உள்ளிட்ட சில கட்சியினர் முயற்சிக்கின்றனர். முதலில் அந்தப் பகுதிகளில் அமைதி திரும்பட்டும்” என்றார் மம்தா.

பாஜக எம்.பி.க்களுக்கு தடை

இதனிடையே பாஜக எம்.பி.க் கள் மீனாட்சி லெகி, ஓம் மாத்தூர், சத்யபால் சிங் ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று கொல்கத்தா வந்தனர்.

இவர்கள் படூரியா நோக்கி புறப்பட்டபோது, விமான நிலையம் அருகில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள், “படூரியா பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில அரசு கூறும்போது எங்களை அனுமதிக்க மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். “எம்.பி.க் களான நாங்கள் மூவர் மட்டும் அங்கு செல்கிறோம்” என்று மீனாட்சி லெகி கோரினார். என்றாலும் போலீஸார் அவர்களை அனுமதிக்கவில்லை. மீறிச் செல்ல முயன்ற அவர்களை மறித்து, விமான நிலைய காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

ஆளுநருடன் சந்திப்பு

இதனிடையே மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் கே.என். திரிபாதியை சந்தித்தனர். அப்போது அவர்கள், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கூர்க்காலாந்து நிலவரம், படூரியா கலவரம் ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். எனவே மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT