தலித்துகள் மீதான தாக்குதல் தொடர்பாக மா நிலங்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டத்தை எதிர்த்து எம்.பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மாயாவதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. அவை கூடியது காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசும்போது "உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு போன்ற காரணத்தால் இந்த அரசு வன்முறையை தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மாயாவதி பேச்சுக்கிடையே நாடாளுமன்ற துணை சபாநாயகர் குறுக்கிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள்ளாக பேசி முடிக்குமாறு கூறினார். அதற்கு மாயாவதி "நான் இன்னும் முடிக்கவில்லை. நீங்கள் இவ்வாறு செய்யக் கூடாது. நான் என் சமூகத்தை காக்கத் தவறினால் இந்த மாநிலங்களவையில் இருப்பதற்கான உரிமை எனக்கு இல்லை. நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலிருந்து மாயாவதி வெளியேறினார்.