இந்தியா

நடிகை பாவனா கடத்தல் வழக்கு: பல்சர் சுனிலின் காவல் நீட்டிப்பு

பிடிஐ

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனிலின் காவலை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு மற்றொரு நடிகையைக் கடத்தியது தொடர்பாக பல்சர் சுனில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரது காவலை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே பல்சர் சுனிலுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது நாளை (ஜூலை 20) விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியே அழைத்து வரப்பட்ட பல்சர் சுனிலிடம், ‘நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்யப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஒப்படைக்கப்பட்டதா’ எனக் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ‘அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஐபி தான் இதைப்பற்றிக் கூறுவார்’ என பல்சர் சுனில் தெரிவித்தார்.

இந்நிலையில் மற்றொரு மலையாள நடிகையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தியது தொடர்பாக பல்சர் சுனில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர். சினிமா தயாரிப்பாளர் ஜானி சகாரிகா கொடுத்த புகாரின்பேரில் எர்ணாகுளம் மத்திய போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பாக தற்போது காக்கநாடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT