இந்தியா

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் தகவல்களை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

பிடிஐ

ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பற்றிய தகவலை மத்திய அரசு வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பற்றிய தகவலை வழங்கக் கோரி, அசோக் குமார் ரெட்டி என்பவர் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இது தொடர்பாக 51 முறை விண்ணப்பித்தும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார்.

இவரது மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் யஷோவர்தன் ஆசாத் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி கள் பற்றிய விவரங்களை வழங்கக் கோரி, ஆர்டிஐ சட்டத்தின்கீழ் அசோக் குமார் பலமுறை விண்ணப்பித்துள்ளார். இதற்காக ஒரு இயக்கமாகவே செயல்பட்ட போதிலும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

எனவே, தங்கள் துறையில் ஊழல் புகாரை எதிர்கொண்டு வரும் அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களது பதவி பற்றிய விவரங்களை ஒவ்வொரு துறையும் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆனால் அவர்களது பெயரை வெளியிடக் கூடாது.

அதாவது துறை ரீதியாகவோ அல்லது ஊழல் கண்காணிப்பு ஆணையம் மூலமோ அல்லது நீதிமன்ற வழக்கு மூலமோ ஊழல் புகாரை எதிர்கொண்டு வரும் அதிகாரிகள் அனைவரும் இதில் அடங்குவர். இதுதவிர, முடித்து வைக்கப்பட்ட வழக்கு பற்றிய எண் ணிக்கை விவரத்தையும் ஆண்டு வாரியாக வெளியிட வேண்டும்.

ஆர்டிஐ சட்டத்தின் 4(1)-வது பிரிவில் இதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு சிறந்த நிர்வாகத்தை வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT