இந்தியா

திரை பிரபலங்களுக்கு கூரியரில் போதைப்பொருள்: கலால் துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

என்.மகேஷ் குமார்

ஹைதராபாத்தில் உள்ள திரைத் துறை பிரபலங்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பேரில் 2 கூரியர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் சிக்கிய விவகாரம் குறித்து தெலங்கானா மாநில கலால் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட தெலுங்கு திரைத் துறை பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள கலால் துறை விசாரணை குழு முன்பு நேரில் ஆஜராகுமாறு தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களிடம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் விசாரணை நடைபெற உள்ளது. இதில் யார் யார் ஆஜராகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே போதைப் பொருள்கள் கூரியர் சர்வீஸ் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பேரில், 2 கூரியர் நிறுவனங்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பட்டது.

இந்நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் துறை, கலால் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT