ஆதார் தொடர்பான மனுக்களை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்த அமர்வு ஜூலை 20-ம் தேதி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டு மக்களின் தனியுரிமை ஆதார் மூலம் பாதிக்கப்படுகிறதா, தனியுரிமை, அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை, அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று ஆகியவை குறித்து விசாரணை மேற்கொள்கிறது.
மனுதாரர்கள் அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 21-ன் படி தனியுரிமை, வாழ்வுக்கான உரிமை ஆகியவை அவசியமானதாகும் என்று கருதுகின்றனர். சட்டப்பிரிவு 19-ல் இது ஆங்காங்கே வந்தாலும் அரசமைப்புச் சட்டத்தில் வெளிப்படையாக இல்லை.
இதற்கு முன்பு தனிமனிதர்களின் தனியுரிமைக் கொள்கை என்பது அடிப்படை உரிமைதானா என்ற மட்டத்தில் நடைபெற்ற இரண்டு வழக்குகளில் ஒருமுறை 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுமுறை 6 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனியுரிமை, அந்தரங்கம் ஆகியவை அடிப்படையோ அல்லது உத்தரவாத உரிமையோ அல்ல என்று தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் 2 நீதிபதிகள் கொண்ட பல அமர்வுகள் இந்த விவாதத்தில் தனியுரிமை என்பது அரசியல் சாசனச் சட்டப்படி அடிப்படை உரிமையே என்று கூறியுள்ளனர். ஆனால் அது அடிப்படை உரிமையாக உத்தரவாதமாக இருக்க வேண்டிய தேவையில்லை என்று கூறிய முந்தைய அமர்வுகளின் நீதிபதிகள் எண்ணிக்கை அந்த முடிவுகளுக்கான அங்கீகரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இம்முறை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனியுரிமை என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்ட அடிப்படையா இல்லையா என்பதை ஒட்டுமொத்தமாக முடிவு செய்யவுள்ளது. மேலும் இது குறித்த முரண்பாடான உத்தரவுகள், தீர்ப்புகள் குறித்தும் முடிவெடுக்கவுள்ளது இந்த அமர்வு.
“ஆதார் திட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடித் தன்மையை நிர்ணயிக்கும் முன்பாக தனியுரிமை என்பது அடிப்படை உரிமையா இல்லையா என்பதை தீர்மானித்தாக வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார்.
அரசிடம் இன்னொரு நீதிபதி செலமேஸ்வர் கூறும்போது, “எழுத்துப்பூர்வ அரசியல் சாசனம் கொண்ட ஒரு குடியரசில் தனியுரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல என்று கூறப்படுவது ஏற்கக் கடினமானதே. ஏகப்பட்ட தீர்ப்புகள் இது அடிப்படை உரிமையே என்று கூறியுள்ளது. அவற்றை நாம் புறக்கணிக்க முடியாது. எனவே இந்தக் கேள்விக்கு பொறுப்பு மிக்க சிந்தனையைச் செலவிடுவது அவசியம்” என்றார்.
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும்போது, அரசியல் சாசனதத்தை வடிவமைத்தவர்களே குடிமக்களுக்கு அனைத்து வகையான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளனர், ஆனால் மிகவும் தன்னுணர்வுடன் தனியுரிமை (பிரைவசி) என்பதை தவிர்த்துள்ளனர், என்றார்.