உலகம் முழுவதுமே சுதந்திரச் சிந்தனையாளராக அறியப்படும் கனடாவின் இளம் பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ, ‘தாராளர்’ என்ற பின்னொட்டால் குறிக்கப்படுகிறார்; ழான் கிரெடின், பால் மார்ட்டின் என்று வெவ்வேறு தலைவர்களைப் பின்பற்றும் தன்னுடைய கட்சியின் வெவ்வேறு குழுக்களை ஒரே அணியாகச் செயல்பட வைத்து வெற்றி பெற்றார்.
சிந்தனைகளைப் பொருத்தவரையில் ஒருவர் வலதுசாரியாகவோ இடதுசாரியாகவோ தான் இருக்க முடியும். நேருவின் கண்ணியமான சோஷலிசச் சிந்தனை, இந்திரா காந்தியின் கரும் இளம் சிவப்புச் சிந்தனை, தீன்தயாள் உபாத்யாயவின் காவியேறிய இளம் சிவப்புச் சிந்தனை என்ற மூன்று இந்தியாவில் உண்டு.
இன்னமும் நூற்றுக்கணக்கில் வகைகள் உண்டு. இடதுசாரிகளிடமிருந்து தொடங்குவோம். சமூக அறிவியலாளர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நமது தரைப்படைத் தலைமை தளபதி ஜெனரல் ரவாத், அவருடைய கருத்துக்காக ஜெனரல் டயருடன் ஒப்பிடத்தக்கவராகத் தெரிகிறார். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களும் காஷ்மீரும் பிரிட்டிஷ் காலனியாக இருந்ததால் நமக்குக் கிடைத்தவை என்கிறார் பார்த்தா.
.அப்படியே வலதுசாரிகளிடம் செல்வோம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தருண் விஜய், ஆலயங் களில் பட்டியல் இனத்தவருக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்று வாதாடுகிறார். மேகாலயத்தைச் சேர்ந்த பழங்குடியை திட்டியதற்காக டெல்லி கோல்ஃப் கிளப்பின் உரிமத்தை ரத்து செய்துவிட்டு அதை வட கிழக்கு மாநிலத்தவருக்கான கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் என்கிறார்.
அவருடைய அமைப்பின் சித்தாந்தமோ, மாட்டுக்கறிக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரம் செய்கிறது, மாட்டை வெட்டக்கூடாது என்று தடுக்கிறது என்பது பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். பட்டியல் இனத்தவர் இதை சாப்பிடு கின்றனர், மாட்டுத் தோலைத்தான் காலணி தயாரிக்க நம்பியிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டாம். நீங்கள் ஜந்தர்மந்தர் போராட்டத்துக்குச் சென்றீர்களா, ‘என்னுடைய பெயரில் வேண்டாம்’ என்ற ஹேஷ் டாக்குக்கு ஆதரவு தந்தீர்களா என்பதிலிருந்து தான் நீங்கள் யார் என்று தீர்மானிக்கப்படும். இந்த இரண்டிலுமே நான் தோற்றவன்.
இந்த அடையாள லேபிள்கள் நம்முடைய தோளில் ஏறிய சுமைகள். இந்த லேபிளை நம் மீது ஆழப் பதிந்துவிட்டால் நம்மால் சுதந்திரமாகச் சிந்திக்க முடியாது, அப்படிச் சிந்தித்தால் “நீங்கள் ஏன் அணி மாறுகிறீர்கள்?” “எந்தப் பக்கம் இருக்க வேண்டும் என்று உங்களால் தீர்மானிக்க முடியாதா?” “பச்சோந்தி போல ஏன் மாறுகிறீர்கள்?” என்ற கேள்விகள் கேட்கப்படும்.
மாட்டைக் கடத்தினார்கள் என்பதற்காகச் சிலர் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்த கையோடு, ஏர்-இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது என்கிற மோடியின் முடிவை நீங்கள் வரவேற்றால் இடதுசாரிகள் உங்களை இந்தக் கேள்வியைக் கேட்பார்கள். ராணுவ ஜீப்பில் ஒரு காஷ்மீரியை வைத்து ஓட்டிச் சென்ற அதிகாரியின் செயலைக் கண்டித்தால் வலதுசாரிகள் உங்களைக் கேட்பார்கள்.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எளிய பதில்கள் உண்டு. முதலாவது, இரண்டு தவறுகள் ஒன்றைச் சரியாக்கிவிடாது. பன்னிரண்டு தவறுகள் நடந்தாலும் ஒரு சரியான செயலை இல்லாமலாக்கிவிட முடியாது. நம்முடைய நாட்டையும் ராணுவத்தையும் ஆதரிப்பதால், அந்த அதிகாரிகளில் ஒருவர் செய்யும் செயலைக் கேள்வி கேட்பது தவறாகிவிடாது.
உலக அளவில் இதைப் பற்றியெல்லாம் நிறையப் பேசியும் விவாதித்தும் இருக்கிறார்கள். ட்ரம்பின் எழுச்சி, பிரெக்சிட், லூ பென் பற்றிய அச்சம், பெர்னி சான்டரின் ஜனநாயகக் கட்சி, ஜெரேமி கார்பினின் தொழிலாளர் கட்சி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று பலவும் பேசப்பட்டுவிட்டது. மோடி-ஷா கூட்டணி பாஜகவை மேலும் கடுமையான காவி தேசியவாதத்துக்கு நகர்த்துவதையும், அவர்களுடைய போட்டியாளர் கட்சி உச்ச ஸ்தாயியில் சுதந்திரச் சிந்தனைகளை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதையும் கூட நிறையப் பேசுகின்றனர்.
பாரதத்தைத் துண்டு செய்வோம் என்று ஜேஎன்யு பல்கலை மாணவர்கள் கோஷமிட்டதாகக் கூறி அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடர எதிர் அணியினர் கிளம்புவார்கள். அவர்களுடைய எதிர் அணியினர் பல்கலை வளாகத்துக்குப் படையெடுப்பார்கள். முடிவு, முன்னவர்கள் வெற்றி பெறுவார்கள். இதில் தோற்பவர் யார் என்றால் சுதந்திரமான சிந்தனையுள்ள இந்தியர்தான். ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட சுதந்திரம், கோஷம் போடுவதற்கும் இருக்கிறது. அதை ஏற்க மறுக்கும் சுதந்திரமும் இன்னொருவருக்கு இருக்கிறது. என்னுடைய குடியரசும் அரசியல் சட்டமும் கெடாமல் இருக்கும் வரை எல்லாவித சுதந்திரங்களும் நன்றாகப் பாதுகாக்கப்படும். இவற்றைக் காப்பாற்ற பலத்தைப் பயன்படுத்துவது அரசியல் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டப்பூர்வ, தார்மிக பொறுப்பாகும். எனவேதான் மாவோயிஸ்ட்களின் மறைவிடம் தகர்க்கப்படுவதும் புர்ஹான் வானி கொல்லப்படுவதும் பாராட்டப்படுகிறது. அதே சமயம், போரில் ஈடுபடாத ஒரு காஷ்மீரியை ஜீப்பின் முன் பக்கத்தில் உட்கார வைப்பதும், கோஷம் எழுப்பியதற்காக தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடுக்கப்படுவதும் கண்டிக்கப்படுகிறது.
சுதந்திரச் சிந்தனை சகாப்தம் முடிந்துவிட்டது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்கப் பத்திரிகையாளர் ஃபரீத் சக்கரியா, ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் இந்திய நிருபர் எட்வர்ட் லுஸ், அமெரிக்க ஊடக ஆய்வாளர் டக்ளஸ் ரஷ்காஃப் இது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
பிரான்சில் இம்மானுவேல் மெக்ரானின் அமோக வெற்றி, சுதந்திரச் சிந்தனை எவ்வளவு வலிமையானது என்று பறைசாற்றுகிறது. ஜெரேமி கார்பின் கட்சிக்குக் கிடைத்த சிறு வெற்றி களை இடதுசாரி-சுதந்திரச் சிந்தனை ஆதரவு நாளிதழான ‘தி கார்டியன்’ கொண்டாடுகிறது.
மதிநுட்பம் என்பது சில சமயங்களில் நாம் எதிர்பாராத இடங்களில் வெளிப்படும். மின் வணிக நிறுவனமான ஸ்னாப்டீலுக்கு விளம்பர வாசகம் எழுதியவர், ‘அன்-பாக்ஸ் ஜிந்தகி’ என்று ஆங்கிலமும் இந்தியும் கலந்து எழுதினார். சுதந்திர சிந்தனையாளர்களான இந்தியர்களும் இப்படி ஒரு கட்டத்துக்குள்ளேயே இருந்து சிந்திப்பதை விட்டு வெளியே வரவேண்டும். சமூகம், பொருளாதாரம், அரசியல் சட்டப் புனிதம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நாம் சுதந்திரச் சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கும் மாவோயிஸ்ட் வன்முறைக்கும் மூலகாரணம் எது என்று கேட்டு விவாதித்து, அவற்றை நியாயப்படுத்தக் கூடாது. அதற்குப் பிறகு நீங்கள் ஜந்தர் மந்தருக்கும் செல்ல வேண்டியதில்லை, ஹேஷ்டேக்குகளையும் பின்பற்ற வேண்டியதில்லை.
இறுதியாக ஒரு வார்த்தை: இடதுசாரிகள் என்னை வலதுசாரி என்று நினைக்கின்றனர், வலதுசாரிகள் என்னை இடதுசாரி என்று நினைக்கின்றனர். எனவே இருதரப்பாராலும் நான் ‘ட்ரோல்’ செய்யப்படுகிறேன்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி