கொல்கத்தாவில் இந்திய கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியை சில நபர்கள் அவரது குடியிருப்புக்கு அருகே தாக்க முயன்றனர். இதில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் மொகமது ஷமி, மனைவி, மகள் ஆகியோர் தங்களது கட்ஜு நகர் குடியிருப்புக்கு வந்தனர்.
இந்நிலையில் தனது பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 காரை நிறுத்தியது தொடர்பாக தகராறு எழுந்தது, அதில் 3 பேர் மது அருந்திய நிலையில் மொகமது ஷமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்க முயன்றுள்ளனர். ஆனால் பாதுகாவலர் உடனடியாக விரைந்து மொகமது ஷமியைக் காப்பாற்றியுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“பாதுகாவலர் தனது காருக்கான வழியை ஏற்படுத்தித் தருவதற்காக மொகமது ஷமி காத்திருந்தார். இதற்கிடையில் 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து காரை நிறுத்த இவ்வளவு நேரமா என்று ஷமியை நோக்கி வசைபாடத் தொடங்கினர், அவர்கள் மது அருந்தியிருந்தனர். மேலும் ஷமியை தாக்கவும் முயற்சி செய்தனர், அதற்குள் குடியிருப்பு செக்யூரிட்டி கார்டு வந்து ஷமி தாக்கப்படாமல் காத்தார்” என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
சம்பவத்தையடுத்து ஷமி போலீஸை அழைக்க சிசிடிவி காமரா உதவியுடன் 3 பேரின் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வரூப் சர்க்கார், ஜெயந்த சர்க்கார், மற்றும் ஷிவா பிராம்னிக் ஆகிய 3 இளைஞர்கள்தான் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் அப்பகுதியில் சலூன் நடத்தி வருபவர்கள், பலமுறை பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டவர்களே என்றார் மூத்த போலீஸ் அதிகாரி.
ஆனால் இந்த மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் ஷமியின் வீட்டுக்குச் சென்று கதவை ஓங்கி அடித்ததும் நடந்துள்ளது, இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.