இந்தியா

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விசாரிப்பார் - கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு

இரா.வினோத்

பெங்களூரு சிறையில் அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா வுக்கு சிறப்பு சலுகைகளுக்காக, ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட் டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதற்காக, கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும் சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட் டோருக்கு ரூ.1 கோடியும் சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் கடந்த புதன்கிழமை கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் ஆர்.கே.தத்தா, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்டோருக்கு 4 பக்க புகார் கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கர்நாடக அரசு உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஒரு வாரத்தில் அறிக்கை

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு மத்திய சிறையில் நடந்த விதிமீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள் ளார்.

இந்த விசாரணை அதிகாரிகள், டிஐஜி ரூபா டி.மவுட்கிலின் புகார் தொடர் பாக அலசி ஆராய்ந்து, முதல்கட்ட அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வார்கள். அனைத்து தரப்பிலும் விசாரணையை முடித்து, விரிவான விசாரணை அறிக்கையை ஒரு மாதத்துக் குள் தாக்கல் செய்வார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் அதிகாரி ரூபாவுக்கு தடை

இதேபோல இந்த விவகாரத்தில் டிஐஜி ரூபா டி. மவுட்கில், தான் கண்டறிந்த முறைகேடு தொடர்பாக‌ அரசுக்கு முதலில் தகவல் அளிக்கவில்லை. துறை சார்ந்த தகவல்களை உயர் அதிகாரியிடம் தெரிவிக்காமல் ஊடகங்களில் தகவலை கசியவிட்டுள்ளார். காவல் துறை விதிமுறைகளை மீறி பேட்டி அளித்து வருகிறார். எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு டிஐஜி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனி இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விசாரணைக்கு தயார்

இதனிடையே சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறும்போது, “சிறையில் சிகரெட், கஞ்சா ஆகியவற்றை விதிமுறைகளை மீறி கைதிகள் பயன்படுத்துவது இது முதல்முறை அல்ல. இத்தகைய விதி மீறலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா தரப்பினரிடம் ஒரு ரூபாய் கூட நான் லஞ்சமாக‌ வாங்கவில்லை. அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை. எனவே எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து சிறைத்துறை டிஐஜி ரூபா டி. மவுட்கில் கூறும்போது, “நான் எழுதிய புகாரின் ஒவ்வொரு வரிக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. காவல் துறையின் விதிமுறையை நான் மீறவில்லை. உயர்நிலை விசாரணைக் குழு அதிகாரியிடம் அனைத்து ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வழங்க தயாராக இருக்கிறேன். எத்தகைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டேன்” என்றார்.

சசிகலாவிடம் விசாரணை

இதனிடையே உயர்நிலை விசா ரணைக் குழு தொடர்பாக கர்நாடக உள்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. உள்துறையை கவனிக்கும் முதல்வர் சித்தராமையா இவ்விவகாரத்தில் நேர்மையான விசாரணையை நடத்தி, குற்றவாளிகளை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையிலான குழுவில், அனுபவம் வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட‌ போலீஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். இந்த விசாரணை அதிகாரிகள், சத்தியநாராயண ராவ், ரூபா டி.மவுட்கில் உள்ளிட்ட சிறை அதிகாரிகளிடம் பலகட்ட விசா ரணையை மேற்கொள்வார்கள்.

இதேபோல பரப்பன அக்ரஹாரா சிறையை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்வார்கள். லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவிடமும் விசாரிப்பார்கள். அதில் ஏதேனும் துப்பு கிடைத்தால், சிறையில் சசிகலாவை சந்தித்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிப்பார்கள். இதனால் குற்றவாளிகள் யாரும், விசாரணைக் குழுவின் பார்வையில் இருந்து தப்ப முடியாது” என்றனர்.

SCROLL FOR NEXT