பிஹார் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியை, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்தார். அவரது பெயரை மேடையில் இருந்து உடனடியாக நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிஹார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தன. தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெற்றது. ஐஜத சார்பில் நிதிஷ்குமார் முதல்வராகவும், ஆர்ஜேடி சார்பில் கட்சித் தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில் லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் புகார் குறித்து அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்தினர். பினாமி சொத்து வழக்கில் தேஜஸ்வி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை. மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளன. ஆனால், ராம்நாத்தை ஆதரிப்பதாக ஐஜத தலைவர் நிதிஷ் குமார் பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் பிஹாரில் ஆளும் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாயின. இந்நிலையில், பாட்னாவில் நேற்று ‘விஸ்வ யுவ கவுசல் திவஸ்’ நிகழ்ச்சி அரசு சார்பில் நடை பெற்றது. இதில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு நிகழ்ச்சியில் தேஜஸ்வி பங்கேற்கவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, ‘‘முதல்வர் நிதிஷ் குமாருடன், தேஜஸ்வி பெயரும் மேடையில் வைக்கப்பட்டது. பின்னர் தேஜஸ்வி பெயர் மட்டும் துணியால் மறைக்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் அவர் பெயர் அவசரமாக அகற்றப்பட்டது’’ என்றனர்.
தேஜஸ்வி யாதவ் பதவி விலக மாட்டார். மெகா கூட்டணியில் பிரச்சினை இல்லை என்று லாலு பிரசாத் கூறினார். ஆனால், நிதிஷ் குமாருக்கு மிக நெருக்கமான ஐஜத பொதுச் செயலாளர் ஷியாம் ரசாக் கூறும்போது, ‘‘ஊழல் விஷயத்தில் எங்கள் நிலை உறுதியானது. எந்த காரணத்துக்காகவும் ஊழலை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.
இதனால் லாலு நிதிஷ் இடையே கருத்து வேறுபாடு முற்றி யுள்ளதாகவும், ஆளும் கூட்டணி யில் விரிசல் அதிகரித்திருப்ப தாகவும் அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.