அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதையடுத்து, காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவின் பேரில், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ஆகிய இருவரும் நேற்று காஷ்மீர் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் ஆளுநர் என்.என்.வோரா ஆகியோரை மத்திய அமைச்சர்கள் சந்தித்து பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர் உள்ளூர் ராணுவ கமாண்டர், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர், சிஆர்பிஎப், பிஎஸ்எப் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலை கருத்தில் கொண்டு, காஷ்மீர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, மீண்டும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட முதல்வர், ஆளுநர், அரசு நிர்வாகம், அமர்நாத் கோயில் வாரியம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படை அமைப்புகளுக்கும் அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி
மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கூறும்போது, “தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து, யாத்ரீகர் களின் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. குறிப்பாக ரோந்து பணிக்கான நேரம் நீட்டிக்கப்பட் டுள்ளதுடன் ஒவ்வொரு வாகனமும் தணிக்கை செய்யப்படுகிறது. பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மொத் தத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது” என்றார்.