கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே துறையின் பாரம்பரிய பிஎன்ஆர் ஹோட்டல்களை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 12 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் மெகா கூட்டணி தலைமையில் முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உள்ளனர். சிபிஐ சோதனையை அடுத்து தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என மாநில பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் நேற்று பாட்னாவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. இதில் ‘தேஜஸ்வி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை’ என ஒட்டுமொத்தமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், நிதியமைச்ச ருமான அப்துல்பாரி சித்திக் கூறும்போது, ‘பிஹாரில் மெகா கூட்டணி ஆட்சியைச் சீர்குலைப் பதற்காக நடத்தப்பட்டதுதான் இந்த சிபிஐ சோதனை. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் இதுபோன்ற நடவடிக்கைக்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். இதற்கு எதிராக நாங்கள் போராடி, ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவோம்’ என்றார்.
இதற்கிடையே ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களான ஆர்.சி.பி. சிங், மாநிலத் தலைவர் பசிஷ்த நாராயண் சிங், ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் முதல்வர் நிதிஷ்குமாரின் இல்லத்திற்கு நேற்று சென்று அவரிடம் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் அக்கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகளை நிதிஷ்குமார் எடுப்பார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.