திருமலையில் கடத்திச் செல்லப்பட்ட 9 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், உரவகொண்டா மண்டலம், சாய்புரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த மாதம் 14ம் தேதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்தினருடன் திருமலை வந்தார். அன்றிரவு கோயில் முன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது 9 மாத ஆண் குழந்தை சென்னகேசவலு திடீரென மாயமானது. பதறிப் போன வெங்கேடஷ் உடனடியாக போலீஸில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியை போலீஸார் ஆராய்ந்தபோது குழந்தையை திருடியவர் அடையாளம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீஸார் அறிவித்தனர். மேலும் கடத்திச் சென்றவரின் புகைப்படம் பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டது.
மேலும் குழந்தையை கண்டுபிடிப்பதற்காக டிஐஜி பிரபாகர் ராவ் உத்தரவின் பேரில் 18 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் குழந்தையை தேடிவந்தனர்.
இந்நிலையில் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்பவர், தனது சொந்த ஊரான பேளுக்குறிஞ்சியில் உள்ள போலீஸ் நிலையத்தில் குழந்தையுடன் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து குழந்தை ஆந்திரா போலீஸாரிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் நேற்று காலை திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் பெற்றோரிடம் டிஐஜி பிரபாகர் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட வெங்கடேஷ் தம்பதியினர், தமிழக, ஆந்திரா போலீஸாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்
கடத்தியது ஏன்?
அசோக் குழந்தையை கடத்தியது ஏன் என நிருபர்களிடம் டிஐஜி பிரபாகர் கூறியதாவது:
நாமக்கல்லை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அசோக், ஏற்கெனவே திருமணமான தங்காயி என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் விலக்கி வைத்ததால் இருவரும் பெங்களூருவில் குடியேறி வசித்து வந்தனர். குழந்தை பிறந்தால் குடும்பப் பிரச்சினை தீர்ந்து விடும் என அசோக் எண்ணியிருந்தார். இந்நிலையில் தங்காயிக்கு ஏற்கெனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை அறிந்து அசோக் வேதனை அடைந்தார்.
பின்னர் மன ஆறுதலுக்காக பெங்களூருவில் இருந்து திருமலைக்கு வந்த அசோக்கும், அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை சென்னகேசவலுவை கண்டதும் அதை திருடிச் சென்று குடும்பத்தாரிடம் தங்களது குழந்தை என அறிமுகப்படுத்தி அவர்களுடன் சேர்ந்துவிடலாம் என திட்டம் தீட்டினர். அதன்படி இருவரும் குழந்தையை தூக்கிச் சென்று, 9 மாதங்களுக்கு முன் தான் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக குடும்பத்தாரிடம் காண்பித்துள்ளனர். அவர்களும் மகிழ்ச்சி அடைந்து இருவரையும் குடும்பத்துக்குள் சேர்த்துக் கொண்டனர்.
ஆனால் குழந்தை அழும்போதெல்லாம் தாய்பாலுக்கு பதிலாக, புட்டிப்பாலை தங்காயி கொடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் இதுபற்றி கேட்டுள்ளனர். அத்துடன் இருவரின் புகைப்படங்களும் பத்திரிகையில் வெளியானதால் அவர்களது திருட்டுத்தனம் அம்பலமானது. இதையடுத்து உறவினர்கள் சூழ அசோக், குழந்தையுடன் பேளுக்குறிஞ்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.