இந்தியா

33 சதவீத இலக்கை எட்டுவதற்கு துணை ராணுவ படையில் கூடுதலாக பெண்களை சேர்க்கும் பணி தொடக்கம்

பிடிஐ

துணை ராணுவ படைகளில் கூடுதலாக பெண்களைச் சேர்க்கும் பணியை, மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) ஆகியவற்றில் 33 சதவீத காவலர் பணியிடங்களில் பெண்களைத் தேர்வு செய்யவும், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), சஷாஸ்ட்ரா சீமா பால் (எஸ்எஸ்பி), இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை (ஐடிபிபி) ஆகியவற்றில் 15 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த படை பிரிவுகளில் காவலர் (கான்ஸ்டபிள்) நிலை பணியிடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தற்போது இடஒதுக்கீடு இலக்கை எட்டுவதற்காக கூடுதலாக பெண்களைத் தேர்வு செய்யும் பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த துணை ராணுவ படைகளில் 9 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் தற்போது 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள். இவர்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பெண்களுக்கு அதிகார மளித்தல் தொடர்பான ஆய்வுக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், துணை ராணுவ படைகளில் கூடுதலாகப் பெண்களைச் சேர்க்கும் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT