இந்தியா

இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாடு: மேற்பார்வை குழுவை மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி - உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) செயல்பாட்டை கண் காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவை மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறும்போது, “எம்சிஐ மேற்பார்வைக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அக்குழுவை மாற்றுவதற்காக மத்திய அரசு முன்மொழிந்த 5 மருத்துவர்களும் மிகவும் திறமையானவர்கள். இது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது” என்றனர்.

ஜே.செலமேஸ்வர், ஆர்.கே. அகர்வால், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள மற்ற 4 நீதிபதிகள் ஆவர்.

மேலும், இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் யாரேனும் எம்சிஐ மேற்பார்வைக் குழுவில் இடம்பெற விரும்பவில்லை எனில், அவருக்கு பதில் வேறு ஒருவரை மத்திய அரசு நியமித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடு சரியில்லை என கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மேற் பார்வைக் குழுவை அமைத்து கடந்த ஆண்டு மே 2-ம் தேதி உத்தரவிட்டது. ஓராண்டுக்கு அல்லது உரிய மாற்று ஏற்பாடு களை மத்திய அரசு எடுக்கும் வரை இந்தக் குழு செயல்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவக் கல்லூரிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் வாதாடும்போது, “எம்சிஐ மேற்பார்வைக் குழுவின் பதவிக் காலம் முடிந்துவிட்ட நிலையில், மத்திய அரசு இன்னும் எந்த ஒரு மாற்று ஏற்பாட்டையும் உருவாக்கவில்லை” என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், மேற்பார்வைக் குழுவை மாற்றி அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்பார்வைக் குழுவை மாற்றுவதற்காக 5 மருத்துவர்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பித்தார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT