ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக 1996ம் ஆண்டு ‘சைல்ட்லைன்' மையம் தொடங் கப்பட்டது. அதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. தற்சமயம் நாட்டின் 282 இடங்களில் 543 தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தனது சேவையை அளித்து வருகிறது.
இந்நிலையில் இதன் சேவையை மேலும் விரிவுபடுத்து வதற்கு கொல்கத்தா, குர்கான் மற்றும் சென்னை ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் புதிய ‘சைல்ட்லைன்' (அவசர உதவி தொடர்பு) மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறும்போது, "இந்த மூன்று புதிய மையங்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 500 நகரங்களில் குழந்தைகளுக்கு உதவ முடியும். நாட்டின் இதர பகுதிகளில் உள்ள இடங்களுக்கெல்லாம் இந்த மூன்று மையங்களே தகவல் மையங்களாகவும் செயல்படும். இதன் மூலம் ஒரு குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட்டால் விரைந்து செயலாற்ற முடியும்" என்றார்.
தற்போது ‘சைல்ட்லைன்' மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அதனால் மேற்கு மற்றும் வட இந்தியாவில் இருந்து வரும் அழைப்புகளை மிக விரைவாகக் கவனிக்க முடிகிறது. ஆனால் இந்தப் புதிய மையங்கள் மூலம் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் சேவையாற்ற முடியும்.
‘சைல்ட்லைன்' அமைப்பின் 1098 என்ற எண்ணுக்கு இப்போது வரை 38,22,081 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் சுமார் 4 சதவீதம் அழைப்புகள் காணாமல் போன குழந்தைகள் பற்றியதாக இருக்கின்றன.