பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துவோருக்கு மத்திய அரசு அடைக்கலம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று கூறும்போது, “பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இவர்களைக் குறிவைத்து செயல்படும் தனியார் படைக்கு (பசு பாதுகாவலர்கள்) மத்திய அரசு அனுமதி அளிப்பதுடன் அடைக்கலமும் அளிப்பது தெளிவாகியுள்ளது. மேலும் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதுபோன்ற தனியார் படைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். இவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
இதனிடையே, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம், பார்சிங்கி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் பசு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தகவல் கிடைத்த வுடன் அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். சம்பவம் குறித்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.