மதுபான வகையைச் சேர்ந்த பீர் ஒருவகை ஆரோக்கிய பானம் என ஆந்திர மாநில கலால் வரித்துறை அமைச்சர் கோத்தபல்லி சாமுவேல் ஜவஹர் கூறியது பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர், "பீர் ஒருவகை ஆரோக்கிய பானம். அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.
பீர் ஆரோக்கிய பானம் என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என நிருபர் கேட்டதற்கு, "இது குறித்து அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியும். நீங்கள் இன்னொரு நாள் அதற்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்" என அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுஅடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., ரோஜா கூறும்போது, "பீர் ஆரோக்கிய பானம் என்று அமைச்சரே கூறும்போது அதை மருந்தகங்களில் விற்பனை செய்யலாமே. குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் மாணவர்களுக்கும் கூட சத்து பானமாக கொடுக்கலாமே.
ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சி மதுபானக் கடைகளை அதிகரித்துள்ளது. விவசாயிகள் மீதோ வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் மீதோ அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. இது மக்கள் விரோத அரசு" என விமர்சித்தார்.