இந்தியா

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உ.பி.யில் கைது

செய்திப்பிரிவு

கடந்த 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காதிர் அகமது என்பவரை சிறப்பு படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி அடுத்தடுத்து 12 இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 257 பேர் உயிரிழந்தனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர். ரூ.27 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. இதுதொடர்பான வழக்கில் காதிர் அகமது என்பவர் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் உத்தரபிரதேசத் தில் காதிர் அகமதுவின் சொந்த மாவட்டமான பிஜ்னோரில், உ.பி. மற்றும் குஜராத் மாநில சிறப்பு போலீஸ் படையினர் இவரை கைது செய்தனர்.

250-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், அதி முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக டைகர் மேமன் கருதப்படுகிறார்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்காக பாகிஸ்தானில் இருந்து டைகர் மேமன் அனுப்பிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், குஜராத் மாநிலம், ஜாம்நகருக்கு வந்து சேருவதில் காதிர் அகமது பங்காற்றியுள்ளார்.

காதிர் அகமது மீது தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காதிர் அகமதுவிடம் உ.பி. மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் விரைவில் விசாரணைக்காக குஜராத் கொண்டு செல்லப்படுவார் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

SCROLL FOR NEXT