இந்தியா

சசிகலாவுக்கு உதவிய சிறை கண்காணிப்பாளர் அனிதா பணியிட மாற்றம்: சிறப்பு சலுகைகள் அனைத்தும் பறிப்பு

செய்திப்பிரிவு

சசிகலாவுக்கு உதவிய குற்றச் சாட்டில் சிக்கிய பரப்பன அக்ர ஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளர் அனிதா ராய் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறை பாதுகாப்பு சிறப்பு அதிகாரியாகவும், கண் காணிப்பாள‌ராகவும் அனிதா ராய் நியமிக்கப்பட்டார். சிறையில் உள்ள சசிகலா சிறப்பு சலுகை களைப் பெறுவதற்கு டிஜிபி சத்திய நாராயண ராவ், தலைமை கண் காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா ராய் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, டிஐஜி ரூபா டி.மவுட்கில்‌ புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சசிகலாவுக்கு 5 அறைகள் அடங்கிய தனி பிளாக் அதில் சமையலறை, படுக்கை அறை உள்ளிட்ட வசதிகள் இருக்கும் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த 17-ம் தேதி டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா டி.மவுட்கில், தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை கர்நாடக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்தது. ஆனால் புகாரில் சிக்கிய அனிதா ராய்க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டார்.

இதனிடையே அடுத்து வெளியான வீடியோவில் சசிகலாவுடன் அனிதாவும் இடம்பெற்றிருந்தார். சீருடை அணியாமல் வண்ண உடையில் வலம் வரும் சசிகலாவுக்கு அனிதா உடந்தையாக இருந்தது அம்பலமானது. இதே போல சிறையில் அனிதாவுக்கு எதிராக கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில், தலைமை க‌ண்காணிப்பாளராக இருந்த அனிதா ராய் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து தார்வாட் சிறைக்கு பணியிட‌மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவருக் குப் பதிலாக ரமேஷ், பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட் டுள்ளது.

இதனால் சிறையில் சசிகலா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT