இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டெல்லி போலீஸார் நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பெயர் சேர்க்கப் படவில்லை. எனினும் அவர் மீது விரைவில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது.
இதுதொடர்பாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், தினகரனின் நண்பர் மல்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த தினகரன் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்நிலையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக டெல்லி போலீஸார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். 701 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர் சேர்க்கப்பட வில்லை.
“இடைத்தரகர் சுகேஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் பல்வேறு வழிகளில் டிடிவி தினகரன் அனுப்பிய பணம் ஆகும். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது விசா ரணையில் தெரியவந்துள்ளது” என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்த விசா ரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிபதி மனோஜ் ஜெயின் ஒத்தி வைத்தார். இவ் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப் புள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் சேர்க்கப்படாதது குறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, டிடிவி தினகரன் மற்றும் இதர நபர்கள் மீதான விசாரணை முடிந்தபிறகு அவர்களுக்கு எதிராக விரைவில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.