மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடு முறையை அறிவித்துள்ளது மலையாள செய்தி நிறுவனமான ‘மாத்ரு பூமி’.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இம் முறைதான் அறிமுகமானது. கேரளத்தில் இதை எப்போதோ அமல்படுத்தி விட்டனர். இந்தியா விலேயே மக்கள் தொகையில் பெண்கள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளம்தான். கல்வி, வேலைவாய்ப்பு என சகலத் திலும் பெண்கள் அங்கு கோலோச்சுகின்றனர். இதழியல் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல.
கேரளத்தில் புகழ்பெற்ற ‘மாத்ரு பூமி’ செய்தி நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில் வேலைசெய்யும் பெண்களுக்கு, மாதவிடாயின் முதல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ‘கல்சர் மெஷின்’ என்னும் நிறுவனம்தான் இத்திட்டத்தின் முன்னோடி.
இதுகுறித்து,‘மாத்ரு பூமி’யின் இணை இயக்குநர் எம்.வி.ஸ்ரேயாம்ஸ் குமார் கூறும்போது, “மாதவிடாய் பெண்களின் பிரச்சினை என்னும் அளவுக்கே புரிதல் உள்ளது. அதில், ஆண்களின் உதவியைப் பெற வழி இல்லை. எங்கள் நிறுவனத்துக்காக இரவு, பகல் பார்க்காமல் உழைக்கும் பெண் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்கவும், மாதவிடாய் குறித்து பொதுவாக நிலவும் தயக்கத்தை அகற்றவும் இம்முடிவு எடுத்தோம்” என்றார்.
இந்த அறிவிப்பின் மூலம், ‘மாத்ரு பூமி’ தொலைக்காட்சியில் பணிபுரியும் 320 ஊழியர்களில், 75 பெண் ஊழியர்கள் பலன் பெறு கின்றனர். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் நாளிதழ் பிரிவுகளிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த இந் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முதல் நாள் வலி
‘மாத்ரு பூமி’ நிறுவனத்தின் அறிவிப்பை, கேரள மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக நாகர்கோவிலைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாலி கூறியதாவது:
ஏற்கெனவே, வெளிநாடுகளில், பல நிறுவனங்களில் இந்த நடை முறை உள்ளது. பொதுவாக ஒரு இயல்பான மாதவிலக்கின் கால அளவு 28 நாட்கள். இயல்பாக மாத விலக்கு வரும் அனைவருக்குமே முதல் நாளில் வலி இருக்கும். இதனை, பலரால் தாங்கவே முடியாது.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த சூழலை எப்போது எதிர்கொள்ளப் போகிறோம் என்னும் படபடப்பு அதிகம் இருக்கும். சிலருக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடி யாத அளவுக்கு வலி இருக்கும். இன்னும் சிலருக்கு ஊசி போட்டும் கூட வலி நிற்காது. சிலருக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு வலி நீடிக்கும். இத்தனைக்கும் நடுவில் இந்த விடுமுறை செய்தி பெண் களுக்கு ஒரு வரம் ஆகும். அரசும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று கூறினார்.
இந்த திட்டம், தலைவர்களின் வருகைக்காகவோ, சாலையில் போக்குவரத்தைச் சீர் செய்யவோ காத்து நிற்கும் பெண் காவ லர்கள் முதல் பெண் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியது அவசியம் என்கின்ற னர் சமூக ஆர்வலர்கள்.