இந்தியா

காஷ்மீர் என்கவுன்ட்டரில் முக்கிய தலைவர் உட்பட 2 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழப்பு

பிடிஐ

காஷ்மீரில் 6 போலீஸாரை கொன்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர் உட்பட 2 தீவிரவாதிகளை பாது காப்புப் படையினர் நேற்று என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.

அனந்த்நாக் மாவட்டம் டயல்காம் பகுதியில் உள்ள பிரென்டி பத்போரா கிராமத்தில் நடந்த இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் தஹிரா (44) என்ற பெண்ணும் ஷப்தப் அகமது சோபன் (21) என்ற இளைஞரும் பலியாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் டிஜிபி எஸ்.பி.வைத் கூறும்போது, ‘‘பத்போரா கிராமத்தில் நடந்த என்கவுன்ட்டர் முடிவுக்கு வந்தது. லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தலைவரான பஷீர் லஷ்கரி மற்றும் ஆசாத் தாதா என்ற அவ்விருவரும் கொல்லப் பட்டுவிட்டனர்’’ என்றார்.

சண்டையின்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த தஹிரா என்ற பெண் குறுக்கே வந்த தால் அவர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தார். என்கவுன்ட்டரை எதிர்த்து அப் பகுதியில் போராட்டம் நடத்த முயன்றவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது சோபன் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதுதவிர 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் டயல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த இரு தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரை கண்டதும் துப்பாக்கி யால் சுட்டனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உரிய பதிலடி கொடுத்து அவர்கள் இருவரையும் கொன்றதாக கூறப்படுகிறது.

தெற்கு காஷ்மீரின் அச்சாபால் என்ற பகுதியில் கடந்த மாதம் 16-ம் தேதி லஷ்கரியும், சோபனும் தாக்குதல் நடத்தியதில் 6 போலீஸார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT