பால்ய திருமணம் செய்து வைக்கப்பட்டாலும், மருத்துவ ராக வேண்டும் என்ற கனவை விடாத இளம்பெண், நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கரேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா யாதவ். வறுமையில் தவிக்கும் விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அக்கா ருக்மா. ரூபா 3-ம் வகுப்பு படித்தபோது 8 வயதில் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
சங்கர்லால் என்ற 12 வயது சிறுவனுக்கு ரூபாவையும், அவரது அண்ணன் பாபுலாலுக்கு ருக்மாவையும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பிறகும் ரூபா நன்கு படித்தார். 10-ம் வகுப்பில் 84 சதவீத மதிப்பெண் பெற்று ரூபா தேர்ச்சி பெற்றார்.
அதன்பிறகும் தொடர்ந்து படிக்க ரூபாவை அவரது கணவரும் மைத்துனரும் உற்சாகப்படுத்தினர். அதேபோல் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு பிளஸ் 2 தேர்விலும் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். ரூபாவின் கணவரும் மைத்துனரும் ஆட்டோ ஓட்டியும் விவசாயத்தில் வந்த சொற்ப பணத்திலும் அவரைப் படிக்க வைத்தனர். ஆனால் கிராம மக்கள் அவர்களை கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். அதை பற்றி ரூபா கவலைப்படவில்லை.
பிளஸ் 2 முடித்தவுடன் பி.எஸ்சி படிக்க விண்ணப்பித்தார். அத்துடன் ஏஐபிஎம்டி நுழைவுத் தேர்விலும் பங்கேற்றார். இதுகுறித்து ரூபா கூறும்போது, ‘‘நல்ல அரசு மருத்துவக் கல்லூரியில் சேர நான் தகுதி பெறாவிட்டாலும், ஏஐபிஎம்டி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் என் கணவருக்கும், அவரது அண்ணனுக்கும் உற்சாகத்தை அளித்தது. அதனால் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் பங்கேற்க கோட்டாவில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்த்து விட்டனர்’’ என்றார்.
தற்போது 21 வயதாகும் ரூபா யாதவ் கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டார். ஆனால், லட்சியத்தை அடைவதற்குத் தேவையான மதிப்பெண்களில் சற்று குறைந்துவிட்டது. எனினும், அவர் நல்ல மதிப்பெண் எடுத்ததால், பயிற்சி அளிக்கும் நிறுவனமே ரூபா யாதவுக்கு கல்வி உதவித்தொகை அளித்தது. அதன்பிறகு இந்த ஆண்டு நீட் தேர்வில் 603 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 2,612-வது ரேங்க் எடுத்துள்ளார்.