திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேற்று மதப் பிரச்சாரம் செய்ததாக நேற்று சென்னையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேற்றுமதப் பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வேற்று மதத்தவர் இக்கோயிலில் பக்தர்களிடம் தங்களது மதத்தில் இணையுமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து திருமலை போலீஸில் ஏற்கெனவே சில வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சுதீர் எனும் மதபோதகர் காரில் திருமலைக்கு செல்லும் வழிநெடுகிலும் வேற்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயில் சன்னதி முன்பு உள்ள வெள்ளி வாசல் அருகே, சென்னையை சேர்ந்த அடகு வியாபாரி ராம்சீதாராமன் என்பவர் வேற்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு பக்தர்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்குள் இருந்த கண்காணிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ராம்சீதாராமன் வேறொரு மதத்துக்கு மாறிய பிறகு இத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து ராம்சீதாராமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.