குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி ஆகஸ்ட் 5ம் தேதி ஆகும். இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று முறைப்படி வெளியிட்டது.
எனினும் இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியோ, எதிர்க் கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ இதுவரை அறிவிக்கவில்லை. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 18. மறுநாள் (ஜூலை 19) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 21 வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
போட்டியிருந்தால், ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலையே பதிவான வாக்குகள் எண்ணப்படும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை அதில் போட்டியிடும் வேட்பாளரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 20 பேர் முன்மொழிய, அதை 20 பேர் வழிமொழிய வேண்டும்.
ஹரியாணாவில் கடந்த ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில் பேனா மை விவகாரத்தால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, ஜூலை 17-ல் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும், ஆகஸ்ட் 5-ல் நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலின்போதும் பிரத்யேக பேனாக்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அந்த பேனாவை கொண்டே வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். வேறு பேனா பயன்படுத்தினால் அந்த வாக்கு செல்லாத வாக்காக கருதப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.