இந்தியா

பண மோசடி வழக்கில் வீரபத்ர சிங் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

பண மோசடி வழக்கில் இருந்து இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இமாச்சல பிரதேச மாநில முதல்வராக உள்ள வீரபத்ர சிங் (83), கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மத்தியில் இரும்பு மற்றும் உருக்குத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் ரூ.6.1 கோடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங், மகன் விக்ரமாதித்யா சிங் மற்றும் சன்னி லால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மத்திய அமலாக்கத் துறையும் கடந்த 2015-ம் ஆண்டு இவர்கள் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்தது.

பண மோசடி தடுப்புச் சட்டத் தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில் சிபிஐ கடந்த மார்ச் மாதம் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் பண மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபத்ர சிங், அவரது மனைவி, மகன் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஆர்.கே கவுபா இதனைத் தள்ளுடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT