இந்தியா

இருதயக் கோளாறு இருப்பதால் கொல்கத்தா பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் 26 வார கருவுக்கு இருதயக் கோளாறு இருப்பதால் அதை உடனடியாக கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “கர்ப்பிணியாக உள்ள நான் மே 25-ம் தேதி பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனது வயிற்றில் வளரும் சிசுவுக்கு இருதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது. மே 30-ம் தேதி மீண்டும் சோதனை செய்ததில் அது உறுதியானது. இதனால் குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு குறைவு என்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தெரியவந்தது.

எனினும் அப்போது 20 வாரங் களைத் தாண்டிவிட்டதால், மருத் துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி கருவைக் கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் மனவேதனையுடன் கருவை சுமந்து வருகிறேன். இதைக் கலைக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்தப் பெண் ணுக்கு சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த எஸ்எஸ் கேஎம் மருத்துவமனையின் 7 மருத் துவர்கள் அடங்கிய குழுவை ஜூன் 23-ம் தேதி அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி மருத்துவக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன் றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதி கள், அந்தப் பெண்ணின் 26 வார கருவை உடனடியாக கலைக்குமாறு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு நேற்று உத்தரவிட்டனர்.

மருத்துவக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், “வயிற்றில் வளரும் கருவை வளர அனுமதித்தால் கர்ப்பிணிக்கு மோசமான மனநல பாதிப்பு ஏற்படும். மேலும் ஒருவேளை குழந்தை உயிருடன் பிறந்தாலும் இருதயக் கோளாறை சரிசெய்ய பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, கருவைக் கலைப்பது நல்லது” என கூறப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT