பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமைப் பாணியில் இந்திரா காந்தி போன்றவர் என்றும், மாறாக ராகுல் காந்தி ஒரு தலைவரே அல்ல என்றும் மூத்த பத்திரிகையாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ராஜ்தீப் சர்தேசாய் தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
"2014- இந்தியாவை மாற்றிய தேர்தல்" (“2014 The Election That Changed India”)- என்ற இந்த நூலில் அவர் பல உள்விவரங்களையும் பதிவு செய்துள்ளார்.
“ஆளுமை முனைப்புக் கொண்ட தலைமைப் பாணியில் மோடி ஒருவேளை இந்திரா காந்திக்கு ஒப்பானவராக இருக்கலாம். அதிகார மனப்பண்புடையவர் என்பதால் சமூக/கலாச்சார/அரசியல் நிறுவனங்கள் தனிநபருக்கு சேவகம் செய்யும் போக்கை எதிர்பார்க்கலாம்.
இந்திரா காந்தி போலவே, எதிர்க்கட்சியினரால் எளிதில் பிடிக்க முடியாத ஒரு தலைவராகவே மோடி விளங்குவார். மேலும் அமைச்சர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை மோடி ஏற்படுத்தியுள்ளார்” என்று அவர் கூறியுள்ள அதே வேளையில், தன்னிடம் மோடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் கூறிய தகவலையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, மோடியின் இல்லத்திற்கு பின்வழியாகவே அந்த அமைச்சர் எப்போதும் செல்வாராம்.
மேலும், மோடியைச் சந்திக்க வரும் அமைச்சர்கள் அவர் இல்லத்தில் இருக்கும் முக்கிய ஹாலில் பேச மாட்டார்கள் பின்புறம் உள்ள தோட்டத்தில்தான் பேசுவார்கள் என்றும் பெயர் குறிப்பிடாத அந்த அமைச்சர் கூறியதை இந்த நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
அமைச்சர்கள் தேர்வு கூட மோடிக்கு நம்பகமான அருண் ஜேட்லி, அமித் ஷா ஆகியோரே தேர்வு செய்து ஆர்.எஸ்,எஸ். ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என்கிறார் இந்த நூலாசிரியர்.
நரேந்திர மோடிக்கு அருண் ஜேட்லி மீது அபரிமிதமான நம்பிக்கை என்றும் சுஷ்மா சுவராஜ் மீது மோடிக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றும் இவர் தன் நூலில் கோருகிறார்.
ஸ்மிருதி இரானிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததே, பாஜக-வின் ஒரே பெண்முகம் சுஷ்மா மட்டுமல்ல என்பதை அறிவுறுத்தவே கொடுக்கப்பட்டதாகவும் இந்த நூல் கோருகிறது.
“ஜேட்லி மற்றும் ஒரு சிலரைத் தவிர பிற அமைச்சர்களின் திறமை குறித்து மோடிக்கு அவ்வளவாக திருப்தி இல்லை” என்று எழுதியுள்ளார் சர்தேசாய்.
மேலும், “கடினமான, செயலூக்கம் உள்ள அரசியல்வாதி மோடி, அவருக்கு சவால் ஏற்படுத்தவேண்டுமெனில் காங்கிரஸ் அதன் காலத்திற்கு அப்பால் சிந்திக்க வேண்டும், வெறும் பேச்சினால் மோடியை அசைக்கக் கூட முடியாது, பொறுமையற்ற, இளம் இந்தியர்களின் விருப்பங்களை காங்கிரஸ் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம்” என்று தன் நூலில் கூறியுள்ளார் சர்தேசாய்.