இந்தியா

பெங்களூருவில் விடுதி அறையை துளையிட்டு 3 கிலோ தங்க நகை கொள்ளை

இரா.வினோத்

பெங்களூருவில் உள்ள காட்டன் பேட்டை பிரதான சாலையில் பிரகாஷ் (47) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். தங்கம், வெள்ளி நகைகளை விற்பதுடன், தங்க நகைகளை அடமானமாக பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தும் வருகிறார். இந்த கடைக்கு மேல் தளத்தில் தனியார் விடுதி இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

மறுநாள் கடையை திறந்த போது, க‌டையின் மேல்புறம் துளையிடப்பட்டு 3 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், காட்டன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக பெங்களூரு மேற்கு மண்ட காவல் ஆணையர் அனுஜித் கூறும்போது, “கடந்த ஜூன் 28-ம் தேதி குல்பர்காவை சேர்ந்த முகமது ஹூசேன் (29) பணி நிமித்தமாக பெங்களூரு வந்து அறையில் (101-ல்) தங்கியுள்ளார். அவர் தினமும் நகைக்கடையை கண்காணித்து, கொள்ளை அடிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 10 நாட்களாக இரவு நேரத்தில் அறைன் தரையில் துளையிட்டுள்ளார்.

இதே கட்டிடத்தின் பக்கத் தில் கட்டுமானப் பணி நடை பெற்றுவருவதால், இந்த சத்தத்தை யாரும் சந்தேகிக்கவில்லை. விடுதி பாதுகாவலர்கள் அறையை சுத்தம் செய்யவும் அனுமதிக்காமல் இருந்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கதவையொட்டி தரையை துளையிட்டுள்ளார். இந்நிலையில் க‌டந்த சனிக்கிழமை இரவு முழுவதுமாக துளை யிட்டு ரூ.1 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்” என்றார்.

SCROLL FOR NEXT