இந்தியா

29-வது நாளாக கூர்க்காலாந்து பந்த்: சுற்றுலா அமைச்சர் கார் மீது தாக்குதல் - அரசு கட்டிடங்களுக்கு தீவைப்பு; மே.வங்கத்தில் பதற்றம்

செய்திப்பிரிவு

கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி நேற்று 29-வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. அப்போது அரசு கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் டார்ஜிலிங் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

மேற்குவங்க மாநிலத்தின் பிரபல மான சுற்றுலாத் தலம் டார்ஜிலிங் உட்பட சில மலைப்பகுதிகளைப் பிரித்து, கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மலைப் பகுதிகளைச் சேர்ந்த 15 அரசியல் கட்சிகள் சேர்ந்து கூர்க்காலாந்து இயக்க ஒருங்கிணைப்பு கமிட்டியை (ஜிஎம்சிசி) உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பினர் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் நேற்று 29-வது நாளாக நடந்தது.

இந்நிலையில், நேபாள கவிஞர் பானுபக்த ஆச்சார்யாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு மேற்கு வங்க சுற்றுலாத் துறை அமைச்சர் கவுதம் தேவ் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பனகட்டா பகுதியில் அமைச்சர் கார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். அத்துடன் கூர்க்காக்கள் வைத்திருக்கும் கத்திகளுடன் போராட்டக்காரர்கள் கோஷமிட்டபடி ஓடிவந்தனர். பாது காப்புப் போலீஸார் அமைச்சரை உடனடியாக மீட்டு, ராணுவத்தினர் தங்கியுள்ள இடத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கவுதம் தேவ் கூறும்போது, ‘‘இது ஜனநா யகப் போராட்டமே இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த கூடுதல் படைகளை அனுப்ப மேற்குவங்க அரசு கேட்டுக் கொண்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், முன்னாள் ஐஜி (சிறைத்துறை) கிருஷ்ண சிங் மோக்தன் தனது ‘பங்கா ரத்னா’ விருது, நேபாள இசைக் கலைஞர் கர்மா யான்ஸன் தனது ‘சங்கீத் ரத்னா’ விருது, கல்வியாளர் பிரபாத் பிரதான் தனது ‘சிக்கா ரத்னா’ விருது ஆகியவற்றை திரும்ப அளித்து கூர்க்காலாந்து போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். இதுபோல் மேற்கு வங்க அரசு வழங்கிய பல்வேறு விருதுகளைப் பலரும் திருப்பி அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் டார்ஜிலிங் பகுதியில் உள்ள அரசு கட்டிடங் கள், மலை ரயில் நிலையம், அரசு வாகனங்களுக்குப் போராட்டக் காரர்கள் தீ வைத்தனர். ஆனால், வன்முறைகளில் தாங்கள் ஈடுபட வில்லை என்று கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மறுத்துள்ளது. வன்முறையில் ஈடுபடுவது யார் என்பதை அறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT